Skip to main content

ராமேஸ்வரம் மீனவர்களின் உண்ணாவிரதம் வாபஸ்!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Rameswaram fishermen's fast withdrawn

தமிழக கடலோரப்பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்யும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன. கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து காலவரையறையற்ற போராட்டம் நடத்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் சங்கங்கள் சார்பில் கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்திருந்தனர்.

அதன்படி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்குவதைக் கண்டித்தும், மீனவர்களின் படகுகள் நாட்டுடைமையாக்கப்படுவதைக் கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் 700க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 18 ஆம் தேதி முதல் காலவரையறையற்ற போராட்டத்தைத் தொடங்கினர். மீனவர்கள் தங்களது படகுகளில் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். மேலும் ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சி மடத்தில் மீனவர்கள் கடந்த இரு தினங்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தங்கச்சி மடத்தில் மீனவர்கள் நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம்  நடந்த இடத்திற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் வருகை தந்தார். அப்போது அவர், “இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை மீட்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் மீனவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும்” என மீனவர்களிடம் உறுதியளித்தார். மேலும் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மீனவர்கள் வாபஸ் பெற்றுக் கொண்டனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

நாகை - காங்கேசன் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Passenger ferry service between Nagai Kangesan again
கோப்புப்படம்

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்தசோனாவால், தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தச் சூழலில் முதல்நாளில் போதிய பயணிகள் வராததால், 75 சதவீத கட்டண சலுகையில் ரூ.2,375 ஜிஎஸ்டி 18 சதவீதம், ஸ்நாக்ஸ் என மொத்தமாக ரூ.2,803 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இரண்டாம் நாளில் 7 பேர் மட்டுமே பயணம் செய்ய இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் - காங்கேசன் துறைமுக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்திற்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. குறைந்த அளவில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதால் கப்பல் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு பிறகும் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் மழையைக் காரணம் காட்டி பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியுடன் (20.10.2018) நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. அந்தமானில் தயாரிக்கப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் மே 13 ஆம் தேதி (13.05.2024) நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்க உள்ளது. இதற்காக இந்தக் கப்பல் மே 10 ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வர உள்ளது. பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலின் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 5 ஆயிரமும், மேல் கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 7 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.