மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆகியவை ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும். கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக, இவ்விழாக்கள் பக்தர்கள் அனுமதியின்றி ஆகமவிதிப்படி நடத்தப்பட்டன.
இதனையடுத்து கரோனா பரவல் குறைந்தநிலையில் கோவில்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது இரண்டாம் கட்ட கரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த ஆண்டும் மதுரை சித்திரை திருவிழாபக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டப்பட்டது.
அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சித்திரை திருவிழா எப்போதும் போல பக்தர்கள் அனுமதியோடு நடத்தக் கோரியும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு, மத்திய மாநிலஅரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அதனால், அவர்களை காவல்துறையினர் குண்டுக் கட்டாக தூக்கி தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர். போராடியவர்களைக் கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.