"தன்னுடைய படத்தை மார்பிங் செய்து ஆபாசப்படமாக்கி இணையவெளியில் வெளியிடவுள்ளதாகவும், இல்லையெனில் பணம் கேட்டு மிரட்டுவதாகவும்" இளம்பெண் ஒருவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் பிரத்யேக எண்ணிற்குப் பேச, இளம்பெண்ணை மிரட்டி பணம் பறித்த ஆறு இளைஞர்களை அதிரடியாக கைது செய்துள்ளது ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை.
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பூவிளத்தூர் செல்லும் சாலை பெண் ஒருவர் அருகில், கடந்த 08.06.2020-ஆம் தேதி அன்று தனது உறவினருடன் பேசிக்கொண்டிருந்த போது அந்தப் பெண் மற்றும் உறவினரை 'TN 65 U 5836' என்ற ஆறு இளைஞர்கள் காரில் கடத்திச் சென்று தாக்கியதாகவும், மேலும், அந்தப் பெண் அணிந்திருந்த செயின், மோதிரம் போன்ற பொருள்களை திருடிச் சென்றதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் சத்திரக்குடி காவல் நிலையத்தார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடிய நிலையில், அதே பெண் தன்னுடைய படத்தை மார்பிங் செய்து ஆபாசப்படமாக்கி இணையவெளியில் வெளியிடவுள்ளதாக ஆறு இளைஞர்கள் மிரட்டியதாகவும் மாவட்ட எஸ்.பி.வருண்குமாரின் பிரத்யேக எண்ணிற்குத் தொடர்பு கொள்ள மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவுப்படி, பரமக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், அதே பகுதியினை சேர்ந்த சீதக்காதி, இளஞ்செழியன், சேதுபாண்டி, தனசேகரன், அரவிந்த் மற்றும் காளிதாஸ் ஆகிய 6 நபர்கள் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்த நிலையில், அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், "அதே பகுதியிலுள்ள போகலூர், பரமக்குடி சத்திரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இளம் பெண்கள், குறிப்பாக ஸ்கூட்டியில் செல்லும் சிறு வயது பெண்கள் மற்றும் கணவனை பிரிந்து வசிக்கும் பெண்களை தங்களின் வலையில் சிக்க வைத்து மேலும் கணவனை விட்டுத் தவறான உறவு ஈடுபடும் பெண்களைக் கண்டறிந்து அவர்களை பின்தொடர்ந்து அவர்களை மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவம், மட்டுமில்லாமல் அந்தப் பெண்ணுடன் தொடர்பில் உள்ளவர் வரையும் அழைத்து அவர்கள் இருவரையும் தனிமையில் உல்லாசமாக இருக்கும் பொழுது அதையும் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு இவர்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் அந்தப் பெண்களிடமிருந்து நகை, தங்கச் செயின் மோதிரம் மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்களைத் தொடர்ந்து பறித்து உல்லாசமாக இருந்தது." உள்ளிட்ட தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது 294(b), 363, 342, 386, 395,506(ii), 307 IPC, And 4 of WH ACT & 67 IT ACT பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.