ராம ராஜ்ய ரத யாத்திரையில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சென்றதாக 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் துவங்கிய ராம ராஜ்ய ரத யாத்திரை நாடு முழுவதும் 6,000 கி.மீ தொலைவு பயணம் செய்ய திட்டமிட்டது. மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் உட்பட 5 மாநிலங்களைக் கடந்து, கேரளாவிலிருந்து புனலூர் வழியாக தமிழகத்திற்கு வருவதாக இருந்தது.
ஆனால் ரத யாத்திரை தமிழகம் வருவதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தின. இதனால், பாதுகாப்பு கருதி நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரத யாத்திரை கடந்த 20ம் தேதி தமிழகம் வந்தடைந்தது.
கேரளாவிலிருந்து புனலூர் வழியாக செங்கோட்டை வந்த ரத யாத்திரை அங்கிருந்து மதுரை வழியாக ராமேஸ்வரம் சென்றடைந்தது. இதையடுத்து, ராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடி, நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு நேற்றிரவு வந்த ரதம், இன்று காலை தக்கலை, சாமியார்மடம், உண்ணாமலைக்கடை, குழித்துறை வழியாக திருவனந்தபுரம் சென்றது.
இந்நிலையில், 144 தடை உத்தரவு இருந்த நிலையில் செங்கோட்டை, தென்காசிக்குள் ரதம் வரும்போது ரதத்தின் முன்னும் பின்னும் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களால் இடையூறு ஏற்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களில் மீது செங்கோட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.