Skip to main content

குக்கிராமத்தில் இராஜராஜ சோழன் காலகல்வெட்டுகள்!! ஆச்சர்யப்படும் ஆய்வாளர்கள்!!

Published on 28/01/2019 | Edited on 28/01/2019

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் மாவட்டத்தில் வாரந்தோறும் வரலாற்று ஆவணங்களை தேடி அதனை ஆவணப்படுத்தி வருகின்றனர். அதன்படி தண்டராம்பட்டு அடுத்த ராயண்டபுரம் கிராமத்தில் தென்பெண்ணையாற்றின் கரையில் உள்ள பழைய சிவன் கோயில் அருகில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது இராயண்டபுரம் - தொண்டமானூர் செல்லும் வழியில் தென்பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்துள்ள சிவன்கோயில் அருகில் உள்ள பாறையில் சோழர்காலத்தைச் சேர்ந்த 6 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இக்கல்வெட்டுகளில் 3 சிதைந்த நிலையிலும் 3 நல்ல நிலையிலும் உள்ளன. இக்கல்வெட்டுகளைச் படித்த கல்வெட்டியல் அறிஞர் சு. இராஜகோபால் இக்கல்வெட்டுகள் சோழ அரசன் முதலாம் இராஜராஜனின் காலத்தில்  வெட்டப்பட்டுள்ளது என்றும் இக்கல்வெட்டு இங்குள்ள சிவன் கோயிலுக்கு விளக்கெரிக்க ஆடுகளை தானம் செய்த விவரம் குறிப்பிட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

 

Surprising researchers

 

 

Surprising researchers

 

முதல் கல்வெட்டில் வாணகோப்பாடி பெண்ணைத் தென்கரையில் இராஜகண்டபுரத்தில்  உள்ள கானநங்கை என்ற கொற்றவை தெய்வத்திற்கு ஒரு நந்தா விளக்கெரிக்க 96 ஆடுகளை மும்முடிச் சோழ வாணகோவராயன் என்ற தொங்கல மறவன் என்ற இப்பகுதியில் இருந்த சிற்றரசன் இக்கல்வெட்டை வெட்டியுள்ளான்.   இரண்டாவது கல்வெட்டு இராஜராஜ சோழனின் 12 வது ஆட்சியாண்டில் வெட்டப்பட்டதாகும். இதில்  இராஜகண்டபுரத்தைச் சேர்ந்த கோசக்கர எழுநூற்றுவர் என்ற வணிகக்குழு இவ்வூரில் உள்ள திருக்குராங்கோயில் என்ற சிவபெருமானுக்கு இரண்டு நந்தாவிளக்கு எரிக்க 192 ஆடுகள் தானமாக விடப்பட்ட செய்தி குறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டில் இவ்வூர் மன்றாடிகளில் ஒருவரான அமத்தனின் மகன் காமன் என்பவர் இவ்வூரில் உள்ள  திருக்குரால் ஆள்வார் கோயிலுக்கு விளக்கெரிக்க 30 ஆடுகள் கொடுத்த செய்தி வெட்டப்பட்டுள்ளது. மற்ற கல்வெட்டுகளில்  சிதைந்து இருந்ததால் அதன் முழு விவரம் அறியஇயலவில்லை.

 

Surprising researchers

 

Surprising researchers

 

இக்கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்திகளிலிருந்து தற்போது ராயண்டபுரம் என்று அழைக்கப்படும் இவ்வூர் 1000 ஆண்டுகளுக்கு முன்பு இராஜகண்டபுரம் என்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வூரில் உள்ள இக்கோயில் இறைவன் பெயர் இது வரை வெளியில் தெரியாமல் இருந்தது- தற்போது இக்கோயில் பெயர் திருக்குராங்கோயில் என்றும் இவ்வூரில் கானநங்கை என்ற கொற்றவை சிற்பம் இருந்தது பற்றியும் குறிப்புகள் உள்ளன. ஆனால் கொற்றவை சிற்பம் தற்போது கிடைக்கவில்லை. சோடச லிங்கம் என்ற பதினாறு பட்டை ஆவுடையாரும் சண்டிகேஸ்வரர் சிலையும்  தற்போது கோயிலில் உள்ளது. பழைய கோயிலும் தற்போது இல்லை புதியதாக செய்த இரும்பு ஷீட் கொட்டைகையில் இக்கோயில் சிலைகள் வைத்துள்ளார்கள்.

 

 

இக்கோயில் அக்காலத்தில் மிகவும் சிறப்படைந்த கோயிலாக இருந்திருக்க வேண்டும் ஏனெனில் இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட தானத்தில் மன்றாடி என்று வழங்கப்படுகின்ற இடையரும், கோச்சகர எழுநூற்றுவர் என்ற எண்ணை வணிகக்குழுவும், வாணகோவராயன் என்ற சிற்றரசனும் இக்கோயிலுக்கு தானம் அளித்துள்ளார்கள்.  மற்ற கல்வெட்டுகள் சிதைந்து போனால் பல வரலாற்றுத்தகவல்கள் தெரியாமல்போயின. இக்கோயில் அமைந்துள்ள பகுதியில் 3 கல்செக்குகள் காண்படுகின்றன. இவை இக்கோயில் இறைவனுக்கு விளக்கெரிக்க எண்ணை வழங்குவதற்கு ஏற்படுத்தப்பட்டதாகும்.

 

Surprising researchers

 

இப்பகுதியில் பாயும் தென்பெண்ணையாற்றுக் கரையில் மிகப்பழங்காலந்தொட்டே மனிதநாகரிகம் வளர்ந்த சான்றுகள் உடையது. தொன்டைமானூரில் உள்ள பெருங்கற்கால நினைவுச்சின்னமும் பாறைக்கீறல்களும், இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நடுகற்களும் கல்செக்குகளும் இப்பகுதியின் தொன்மையை பறைசாற்றுகின்றன. தொடர்ந்து இப்பகுதியில் ஆய்வு செய்தால் மேலும் பல வரலாற்றுச்சிறப்பு மிக்க தகவல்கள் கிடைக்கக்கூடும் என்று வரலாற்று ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

 

 

இந்த ஆய்வுக்கு வரலாற்று ஆய்வு மைய தலைவர் த.ம.பிரகாஷ், செயலாளர் ச.பாலமுருகன், பொருளாளர் ஸ்ரீதர், இணைச்செயலர் மதன்மோகன் போன்றோர் ஊர் பொதுமக்கள் ஆதரவுடன் நடத்தி கண்டறிந்துள்ளனர். அதனை தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் ஆதாரங்கள் உள்ளனவா எனவும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்