வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை தொடரும். அதன்படி தமிழகத்தில் மிதமான மழையும், ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமான மழை பெய்யும். சென்னையில் மழை தொடரும். தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று (08.01.2024) மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுகிறது. நாளை (09.01.2024) மற்றும் நாளை மறுநாள் (10.01.2024 கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிக கனமழைக்கும், அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாகத் தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (08.01.2024) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருந்தனர். அதே சமயம் தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, அரியலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதோடு நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு வெளியாகி இருந்தது.
மேலும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று (08.01.2024) நடைபெற இருந்த தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டன. அதே சமயம் சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் எனச் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்தனர். தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கும் இன்று (08.01.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.