தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலாவில் 9 சென்டி மீட்டர் மழையும், தாமரைபாக்கத்தில் 7 சென்டி மீட்டர் மழையும், திருத்தணியில் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகப் பகுதியில் தென்மேற்கு திசையை நோக்கி மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் தமிழக கடலோர பகுதிக்கும், கன்னியாகுமரி கடல் பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.