சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக 143 பேர் தற்காலிக ( என்.எம்.ஆர்) தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக பணி நிரந்தரம் வேண்டி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஊழியர் சங்க தேர்தலின் போது என்.எம்.ஆர் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு தற்போதுள்ள ஊழியர் சங்கத்தினர் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் என்.எம்.ஆர் தொழிலாளர்களின் பணி நிரந்தரம் குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஊழியர் சங்கத்தினர் எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்.எம்.ஆர் தொழிலாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமையில் அண்ணாமலைப்பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஊழியர் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஊழியர் சங்க நிர்வாகிகளை கண்டித்து கோசங்களை எழுப்பினர். போராட்டத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊழியர் சங்க தலைவர் மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்ட என்எம்ஆர் தொழிலாளர்களிடம் உங்களுக்கும் சேர்த்து தான் பணிநிரந்தரம் குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடமும் அமைச்சரிடமும் தபால் கொடுத்துள்ளேன் என்று கூறி வாக்குவாதத்தில் ‘ஈடுபட்டனர் இதனால் அங்கு சிறுபரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து போகசெய்தனர். இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் மணியனை சந்தித்து முறையிட உள்ளனர்.