Skip to main content

உயர் அதிகாரிகள் கொடுத்த டார்ச்சர்; வேலையை ராஜினாமா செய்த பெண் காவலர்!

Published on 25/02/2025 | Edited on 25/02/2025

 

Railway Police woman constable resigns after being tortured by higher-ups

தமிழக ரயில்வே போலீசில், திருச்சியில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்த முத்துச்செல்வி என்பவர் திருச்சி ரயில்வே எஸ்.பி.,க்கு பணியில் தான் அனுபவித்த துன்பங்களை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு: என் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை. கணவர் கூட்டுறவுத் துறையில், கொடைக்கானலில் பணிபுரிகிறார். எங்களுக்கு, பிளஸ் 1 மற்றும் முதல் வகுப்பு படிக்கும், இரண்டு மகள்கள் உள்ளனர். ஏழு ஆண்டுகளாக, பழனி ரயில்வே போலீஸ் நிலையத்தில், முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தேன்.கடந்த ஜன., 25ல், திருச்சிக்கு மாற்றப்பட்டேன். மூத்த மகள், மார்ச், 5ல், பொதுத்தேர்வு எழுத இருக்கிறார். இரண்டாவது மகளுக்கு ஐந்து வயதாகிறது. முழு ஆண்டு தேர்வு முடியும் போது, பணியிட மாறுதல் செய்திருந்தால், மகள்களை வேறு பள்ளிக்கு மாற்றி இருப்பேன். என் குடும்ப சூழ்நிலை கருதி, தங்களை சந்தித்து, எனக்கு அயல் பணியாக, பழனி ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு பணி வழங்க கோரிக்கை மனு அளித்தேன்.

‘நீ அதிகாரிகளை எதிர்த்து பேசுகிறாய். அதனால் தான், பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறினீர்கள். நான் தேவை இல்லாமல், எந்த அதிகாரியையும் எதிர்த்து பேசவில்லை. பழனியில், அயல் பணி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த துாயமணி வெள்ளைச்சாமி, திண்டுக்கல் வட்ட போலீஸ் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுள்ளார். அவர், எனக்கு நீதிமன்ற அலுவல் பணி ஒதுக்கினார்; அப்பணியை செய்து வந்தேன். அதன்பின், அலுவல் தாண்டி, தனிப்பட்ட முறையில், மொபைல் போனில் பேசும்படி மிரட்டினார். அதற்கு நான் உடன்படவில்லை. இந்த தருணத்தில், இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைச்சாமிக்கு வேண்டிய, சிறப்பு எஸ்.ஐ., மணிகண்டன், பழனி ரயில்வே போலீஸ் நிலையத்தில் பொறுப்பேற்றார். அவரும் என்னிடம், இரட்டை அர்த்தத்தில் பேசுவது போன்ற செயலில் ஈடுபட்டார்.

‘இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளச்சாமி சொல்படி நடந்து கொள்ள வேண்டும். மறுத்தால், ரிப்போர்ட் அடித்து, உங்களை பணியிட மாறுதல் செய்து விடுவோம்’ என்று, மிரட்டினார். கடந்த, 2024 ஆக.,10ல், பழனி ரயில் நிலைய நடைமேடை காவல் பணியில் இருந்த, நாகலட்சுமி என்ற காவலரை, மது போதையில் இருந்த ஒருவர் தாக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்காததாலும், நாகலட்சுமியின் சிகிச்சைக்கு உதவி செய்யாததாலும், மணிகண்டனை எதிர்த்து பேசினேன். பெண் போலீசாரின் நடத்தை குறித்து, அவர் கீழ்த்தரமாக பேசினார். அப்போது, போலீஸ் நிலையத்தில் இருந்த, எல்லா பெண் காவலர்களும் எதிர்ப்பு தெரிவித்தோம். இதனால், பழி வாங்கப்பட்டு உள்ளேன்.

இந்த உண்மையை உங்களிடம் தெரிவிக்க விடாமல், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டரும் செயல்படுகிறார். மிகுந்த மன உளைச்சல் காரணமாக, என் பணியை ராஜினாமா செய்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார். இக்கடிதம் தற்போது, போலீஸ் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்