காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள புதூர் கிராமத்தை சேர்ந்த டெய்லர் பிரபாகரன் - ஜானகி தம்பதியினருக்கு திருமணமாகி கடந்த 4 வருடங்களாக குழந்தை இல்லை. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் பலனளிக்காத காரணத்தினால் பிரபாகரன் தம்பதி கோவில் குளம் என்று வேண்டுதல் செய்தும் பலன் அளிக்காத காரணத்தால் விரக்தியில் இருந்தனர். இந்நிலையில், பிரபாகரனுக்கு தூரத்து உறவினரான காஞ்சிபுரம் அடுத்த தாமரைத்தாங்கல் கிராமத்தை சேர்ந்த ஆரோக்யா பால் லாரி டிரைவர் பாபு , தான் பரிகாரங்கள் செய்து வருவதாகவும், பவுர்ணமி அன்று பூஜை பரிகாரம் செய்து தோஷம் கழித்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று சொன்னதை நம்பினார் பிரபாகரன்.
அதன்படி, கடந்த ஞாயிறு 20ம் தேதி அன்று பவுர்ணமி தினத்தில் தாமரைத்தாங்கலை அடுத்த மனோமோகன் அவென்யூவில் இருந்த பாழடைந்த வீட்டில் தோசம் கழிப்பதாக கூறி, யாகம் நடத்துவதை போல, புகை மூட்டி, கற்பூரம் கொளுத்தி, ஆத்தா வரும் நேரம் கண்ணை மூடிக்கொள்ளூங்கள் என்று பாபு கூறியதை நம்பி கண்ணை மூடிய வேளையில், இருவரையும் பாபு கற்களால் தலையில் தாக்கிவிட்டு, ஜானகியின் கழுத்தில் இருந்த 10 சவரன் நகைகளை கொள்ளையடித்து தப்பிவிட்டான்.
காஞ்சிபுரம் தாலுக்கா காவல்நிலைய ஆய்வாளர் ராஜாங்கத்திடம் புகார் அளிக்கவே, அவர் விசாரணை மேற்கொண்டுள்ளார். காயமடைந்த தம்பதியினர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.