18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
2019 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. வாக்குப்பதிவுக்கு முன் 48 மணி நேரத்துக்கு முன்பு, பிரச்சாரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.16) மாலை 6 மணி முதல் தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. ஆனாலும் வீடுகள் தோறும் சென்று பிரச்சாரம் செய்வதற்கு தடையில்லை. அதில் அதிக பட்சம் 5 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். வாக்கு கேட்கும் போது விளம்பர பதாகைகள், துண்டறிக்கைகள், ஆயுதம் போன்றவை வைத்திருக்கக் கூடாது.
தேர்தல் நேர்மையாக நடைபெற தேர்தல் நன்னடத்தை விதி கடுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் தருபவர்கள் மீதும், 5-க்கும் மேற்பட்டு கூடுபவர்கள் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். சத்தமாக வாசகங்களைக் கூறுவதும், ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு பிப்-16 மாலை 6 மணி முதல் 19-ம் தேதி காலை 6 மணிவரை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.