
கொட்டும் மழையில், பெட்ரோல், டீசல், கேஸ் விலை ஏற்றத்தைக் கண்டித்தும், தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்தும் தூய்மைப் பணியாளர்கள், நாகை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகையில் சி.ஐ.டி.யூ சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது, வேளாண் சட்டங்களையும், மின்சார சட்டத் திருத்தத்தையும், மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி தினக்கூலியை 700 ரூபாயாக வழங்கிட வேண்டுமென வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைதுசெய்தனர்.