Skip to main content

’புனிதம் கெடும்!’- பதறும் அர்ஜூன் சம்பத், ‘புனிதம் கெடாது’ - மதுரை ஆதீனம் ஆணித்தரம்

Published on 28/09/2018 | Edited on 28/09/2018
ar

 

10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு செல்ல தேவஸ்தானம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது.   சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பினால் ஐயப்பன் கோவிலின் புனிதம் கெடும் என்று அர்ஜூன் சம்பத் பதறுகிறார். ஆனால், மதுரை ஆதீனம் அருணகிரி நாதரோ, புனிதம் கெடாது என்று ஆணித்தரமாக கூறுகிறார்.


இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், ’’உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தற்காலிக தீர்ப்பு. ஐயப்பன் மீதுபக்தி இல்லாத சில பெண்கள் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை உண்மையான ஐயப்ப பக்தர்கள் ஏற்க மாட்டார்கள்.  ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு வழிபாட்டு முறை இருக்கிறது.  மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட உரிமையில்லை.  இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்.   இந்து மத்திற்கு எதிரானவர்கள் தூண்டுதலின் பேரில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.   இந்த வழக்கில் கோயிலின் புனிதத்தை கெடுக்கும் வைகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.     ஐயப்பனின் புனிதத்தை கெடுக்கும் வகையில் உள்ள இந்த தீர்ப்பை எதிர்த்து சபரிமலை தேவஸ்தானம் மேல்முறையீடு செய்ய வேண்டும்’’என்று  தெரிவித்துள்ளார்.  

 

  மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்,    ‘’சம உரிமையை கொடுத்திருக்கிறது இந்த தீர்ப்பு.  பெண்களும் இறைவனை நம்பித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.   ஆண்களை விட பெண்கள்தான் திருக்கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதில் தீவிரமாக இருக்கிறார்கள்.   திருவிழக்கு பூஜை, பஜனை என்று திருக்கோவில்களில் பெண்கள்தான் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். 

 

சபரிமலைக்குள் செல்ல பெண்களுக்கு அனுமதி உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லும் என்று நான் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே சொன்னேன்.  பாகுபாடு பார்க்காமல் அனைத்து வகையான பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிப்பதுதான் நியாயமானது.  இதில் கோயிலின் புனிதன் கெடுவதற்கு எந்த வகையான வாய்ப்பும் இல்லை என்பதை தெளிவாக தெரிவித்துக்கொள்கிறேன்.  

 

மாதவிலக்கு பெண்களால் புனிதம் கெடும் என்கிறார்கள்.  மாதவிலக்கு பெண்கள் கோவிலுக்கு வருவதை எப்படி சோதனை செய்வீர்கள்?  பெண் காவலர்களை நியமிப்பீர்களா?  இதில் ஏமாற்றிச்செல்லக்கூடிய பெண்கள் இருக்கலாம் அல்லவா?   அதனால் வயது வரம்பு பார்க்காமல் அனைத்து வயது பெண்களும் ஐயப்பனை தரிசிக்கலாம் என்று தீர்ப்பு கொடுத்திருப்பது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அனுபவத்தை, ஆற்றலை, முதிர்ச்சியை காட்டுகிறது.   கோயிலின் புனிதம் கெடாது என்பதை நான் ஆணித்தரமாக சொல்கிறேன்.  ஒன்றரை ஆண்டுகள் விசாரணை நடத்தி   அனுபத்தின் அடிப்படியில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளை உண்மையில் பாராட்டுகிறேன்’’ என்று  தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்