புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ளது பாலகிருஷ்ணபுரம் - மாத்தூர் ராமசாமிபுரம். தஞ்சை மாவட்டம் மணக்காடு ஆகிய கிராமங்களுக்கு இடையே வில்வன்னி ஆற்றங்கரையில் 173 ஏக்கர் பரப்பளவில் உள்ளது அம்பலத்திடல். இங்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதில் ஆடு மேய்க்கச் சென்ற சிறுவர்கள் ஆங்காங்கே பானைகள் புதைக்கப்பட்டிருப்பதை பார்த்து தோண்டி பார்த்த போது அவை முதுமக்கள் தாழிகளாக இருந்தது.
அவற்றில் பல சிறு கருப்பு சிவப்பு பானைகளும், குடுவைகளும் கண்டெடுக்கப்பட்டது. இதையறிந்த புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர் ஆய்வு செய்த போது பல் போன்ற எலும்பு துண்டுகளும் பானை ஓடுகளில் குறியீடுகளும் காணப்பட்டது. அவற்றை வைத்து இப்பகுதியில் வன்னி மரங்கள் அடர்ந்திருப்பதால் போர் வீரர்களின் புதைவிடங்களாக இருக்களாம் என்றும், சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குறியீடுகள் உள்ளன என்றும் கூறினார்கள்.
தற்போதும் அதே பகுதியில் ஆய்வுக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் மறு ஆய்வுக்காக சென்ற போது பழங்கற்கால கற்கோடாரி கண்டெடுத்துள்ளனர். அதனால் கீழடிக்கு முந்தைய காலமாக உள்ளது என்றும், அதனால் அரசு அகழாய்வு செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர்.