புதுச்சேரி தெற்கு மாநில திமுக சார்பில் மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடற்கரை காந்தி திடலில் நடைபெற்றது. திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சட்டமன்ற உறுப்பினர் சிவா தலைமை தாங்கிய இந்நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி, எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் அமைச்சர் கந்தசாமி மற்றும் காங்கிரஸ் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் நாராயணசாமி, " வாழ்நாள் முழுதும் மக்களுக்காக போராடிய கலைஞர் நினைவிடத்திற்காக இறந்த பின்னும் போராடி வெற்றி பெற்றவர்" என்றும், கொண்ட கொள்கைகளில் என்றுமே மாறாதவர். அவரது மறைவு அரசியலில் மிகப்பெரும் வெற்றிடம் ஏற்படுத்தியுள்ளது" என்றும் என்றும் புகழாரம் சூட்டினார்.
முன்னதாக முதல்வர் நாராயணசாமி உட்பட அனைவரும் மேடையில் வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியிலும் தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பாக. கலைஞர் நினைவேந்தல் ஊர்வலம் நடைபெற்றது. காந்தி சிலை அருகிலிருந்து தொடங்கிய மவுன ஊர்வலம் அண்ணாசிலை அருகே முடிவடைந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவ படத்திற்கு கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், குறிஞ்சிப்பாடி எம்.எல்.ஏவுமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, தே.மு.தி.க, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினர்.