Skip to main content

"புதுச்சேரிக்கு உண்மையான விடுதலை கிடைக்கவில்லை" - முதலமைச்சர் ரங்கசாமி வேதனை

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

"Puducherry did not get real liberation"-Chief Minister Rangasamy sad

 

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட சமூக அமைப்பினர் சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். அப்போது அவர்கள், 'புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து பெறுவதற்கு முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும், சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி தீர்மானம் கொண்டுவர வேண்டும்' என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

 

மனுவைப் பெற்றுக்கொண்டு சமூக அமைப்பினரிடம் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், தன்னால் மக்களுக்காகச் செயல்பட முடியாதது பற்றி ஆதங்கத்தை வெளிப்படையாக சட்டமன்ற முதல்வர் அலுவலகத்தில் கூடியிருந்தவர்கள் மத்தியில் வெளிப்படுத்தினார்.

 

அதுகுறித்து அவர் கூறும்போது, "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து குறித்து மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அவர்களும் பார்ப்பதாகக் கூறுகின்றார்கள். ஒரு கட்டத்தில் முடியுமா? என்று கேட்டால் முடியாது என்று சொல்கிறார்கள். வாக்களித்த மக்கள் எங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் செய்ய முடியாத சூழலில் இருக்கிறோம். வெளியே உள்ளவர்களுக்குத் தெரியாது. ஆனால் தினசரி மன உளைச்சல்தான் ஏற்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு கூட்டத்திலும் தலைமைச் செயலாளர், அதிகாரிகள் ஒவ்வொருத்தரிடம் இருந்து ஒவ்வொரு கருத்து வரும். அப்படி ஆகும்போது எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் இல்லை என்பது வெளிப்படுத்தி 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. மாநில அந்தஸ்தை வலியுறுத்தியபோது 'ரங்கசாமிக்கு அதிகாரம் பற்றவில்லை. அதனால்தான் கேட்கிறார்' என்று கேலி செய்தார்கள். 'ரங்கசாமி அதிகாரம் வேண்டும் என்பதற்காக இவ்வாறு துடிக்கிறார்' என்று பேசினார்கள். நான் எனக்காகத் துடிக்கவில்லை. மக்களுக்காகத் துடிக்கிறேன். புதுச்சேரி வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவும், பிற்காலத்தில் அரசியலுக்கு வருபவர்கள் இதனால் சிரமப்படக் கூடாது என்பதற்காகத்தான் இதைக் கேட்கிறேன். இதன் விளைவுகளைத் தற்போது நான் அனுபவித்து வருகிறேன். இதற்கு முன்பு இருந்த சூழ்நிலை வேறு மாதிரி இருந்தது. அதற்கேற்ப அப்போது செயல்பட முடிந்தது. ஆனால் கடந்த ஆட்சிக்குப் பிறகு நிலை மாறிவிட்டது.

 

"Puducherry did not get real liberation"-Chief Minister Rangasamy sad

 

கடந்த ஆட்சியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தெளிவாகச் சொல்லிய பிறகு இங்கு நமக்கு ஒன்றுமே இல்லை என்பது போல, மரியாதை இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. தற்போது வெளிப்படையாகப் பேசுவதால் முன்பு பேசாமல் பயந்து இருந்தேன் என்பது கிடையாது. நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். அரசு ஊழியர்கள் சம்பந்தமாக நீதிமன்றத்தில் செய்ய வேண்டும் என்று உத்தரவு வருகிறது. ஆனால் அதைச் செய்யாமல் தடுக்க என்னென்ன வழிகள் உள்ளது என்று அதிகாரிகள் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். மேலும் சில விஷயத்தில் நீதிமன்றம் உத்தரவு வரும்போது எங்களைச் சந்தித்து ஆலோசிக்காமல், அது குறித்து எதுவுமே தெரிவிக்காமல் ஒவ்வொரு துறைக்கும் உடனே உத்தரவு அறிக்கையை அதிகாரிகளே வெளியிடுகின்றனர்.

 

நாம் நினைப்பது போல புதுச்சேரி வளர்ச்சியடைய வேண்டும். மக்கள் நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்தால் நாம் கேட்கிற கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். புதுச்சேரியில் விடுதலை நாள் சம்பிரதாயத்துக்குத்தான் கொண்டாடுகிறோம்.  ஆனால் உண்மையான விடுதலை நமக்குக் கிடைக்கவில்லை. மாநில அந்தஸ்து புதுச்சேரி அரசியலில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான ஒன்றாகும்" என்று கூடியிருந்தவர்கள் முன்னிலையில் வேதனையுடன் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்