புதுக்கோட்டை மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் பிரபலமான திருவிழாக்களில் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத் திருவிழாவும் ஒன்று. வழக்கமாக பங்குனி மாதத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கரோனா பரவல் தடுப்பு உத்தரவால் திருவிழா நடத்தப்படவில்லை. இந்த வருடம் தேர்தல் அறிவிப்பால் திருவிழா சில வாரங்கள் தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் 12 ந் தேதி தேரோட்டம் நடத்த அறிவிக்கப்பட்டு அதற்காக மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது. தேர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, "கரோனா பரவலை தடுக்கும் விதமாக, ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் ரத்து செய்யப்படுவதுடன் அதற்காக அறிவிக்கப்பட்டிருந்த உள்ளூர் விடுமுறையும் ரத்து செய்யப்படுகிறது" என அறிவித்தார்.
இந்த தகவலையடுத்து, அவசரமாகக் கூடிய விழாக்குழுவினர், 10 ந் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு வருவதால், 12 ந் தேதி நடக்க இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர். ஆனால், 9 ந் தேதியான வெள்ளிக்கிழமை மாலையே தேரோட்டத் திருவிழா நடத்த முடிவெடுத்தனர். அதன்படி, இன்று காலை பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தனர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தேர் இழுத்துச் சென்றனர்.