கஜா புயல் நாகை - வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. கஜா புயலால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். புதுக்கோட்டை மாவட்டத்தில் மணிக்கு 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பலத்த காற்று வீசியது.
புதுக்கோட்டை நகரம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு வகையில் பாதித்துள்ளது. இந்த மாவட்டத்தில் இதுவரை 7 பேர் புயலால் உயிரிழந்துள்ளனர். கரம்பங்குடி ஒன்றியம், ஆலங்குடி ஒன்றியம், அறந்தாங்கி ஒன்றியம், கந்தவர்கோட்டை ஒன்றியத்தில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஒன்றியங்களில் தென்னை மரங்கள் மொத்தமாக அனைத்தும் புயலில் சாய்துள்ளது.
கந்தவர்கோட்டை பகுதியில் முந்திரி மரங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மீண்டும் முந்திரி மரங்களை கொண்டு வர இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என்றார்கள் விவசாயிகள். தென்னை விவசாயம், முந்திரி விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை நகரத்துக்கு மின்சாரம் வருவதற்கு குறைந்தது ஒரு வாரத்தில் இருந்து 10 நாள் வரை ஆகும். மின்சார வாரியத்தின் சப் ஸ்டேஷன் புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. செல்போன் டவர்களே இல்லை. எந்தவித தொடர்பும் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 4 வருடங்களாக கடும் வறட்சி ஏற்பட்டிருந்தது. இந்த வருடம் பருவமழை பெய்ததில் விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்தனர். பாதி வளர்ந்த நேரத்தில் இந்த புயலாலும், கடும் மழையினாலும் நெற்பயிர்கள் முழுவதுமாக மூழ்கி முற்றிலும் பாதிக்கப்பட்டு விவசாயிகளை கவலையடைய
வைத்துள்ளது.