
திருச்சி தாரநல்லூர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (27) என்பவர் மீது திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உட்பட பல பகுதிகளில் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் தண்டனை பெற்று புதுக்கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு, தஞ்சை காவல்நிலையங்களில் உள்ள வழக்குகள் தொடர்பாக 5 வாரண்ட்டுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தன.
அதற்காக புதுக்கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருந்த தர்மராஜை தஞ்சாவூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் நேற்று அழைத்து சென்றனர். பின் தஞ்சாவூரிலிருந்து திருச்சிக்கு தர்மராஜை அழைத்துவந்துகொண்டிருந்தனர். அப்போது, இரவு 7.15 மணியளவில் சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் ராமநாதன் மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் பாதுகாப்புக்கு வந்த இரண்டு காவலர்களையும் கீழே தள்ளிவிட்டு தர்மராஜ் தப்பியோடினார்.

இதில் சுதாரித்து எழுந்து ஒரு காவலர் துப்பாக்கியுடன் தர்மராஜை துரத்திச் சென்றார். இருப்பினும் தர்மராஜை பிடிக்க முடியவில்லை. வாகன போக்குவரத்து நிறைந்த சாலையில் தர்மராஜ் தப்பியோடி மறைந்துள்ளார். இதையடுத்து போலீசார் தஞ்சை மாவட்ட எல்லைகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி தஞ்சை – திருச்சி, பட்டுக்கோட்டை, திருவாரூர் செல்லும் சாலை என பல பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.