திருச்சியில் நேற்று இரவு சுமார் 07.30 மணியளவில் தஞ்சாவூர் - திருச்சி நெடுஞ்சாலையில், துவாக்குடிக்கு அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரை பின்தொடர்ந்து சென்று காவல்துறை ஆய்வாளர் எட்டி உதைத்ததில் உஷா என்ற கர்ப்பிணி பெண் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார், அவரது கணவர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் பதற்றமடைந்து சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளரை கைது செய்து, கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமென மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். அமைதியான முறையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தடியடி தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். சிலரை கைது செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிகின்றன.
கர்ப்பிணி பெண் உஷா மரணத்திற்கு காரணமான காவல்துறை ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, உடனடியாக அவரை கைது செய்ய வேண்டுமெனவும், அமைதியாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது தடியடி தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் வலியுறுத்தினர். இந்த செய்தி இணையதளங்களில் வேகமாக பரவியது.
இந்த நிலையில், கர்ப்பிணிப்பெண் மரணத்துக்கு காரணமான துவாக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை செய்யும் நோக்கத்தோடு விபத்தை ஏற்படுத்துதல், தனி மனிதருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் காமராஜ் அடைக்கப்பட்டார். வரும் 21 ஆம் தேதி வரை, அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.