
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் தமிழகம், இலங்கை கடலோரப் பகுதியை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. அதே சமயம் சென்னை மெரினா, பெரம்பூர், சிட்லபாக்கம், மடிப்பாக்கம், விருகம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், திருவொற்றியூர், திருவான்மியூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தரமணி, அம்பத்தூர், மேடவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று (11.12.2024) காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை மெரினாவில் பெய்த மழையால் மழை நீரில் மின்சாரம் கசிந்ததாக அதிமுக நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல் சமூக வலைத்தளத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஆனால் அந்த நிகழ்வு மியான்மரில் நடந்த நிலையில் அது சென்னையில் நடந்ததாக பொய்யான தகவலை பரப்பியதாக அதிமுக நிர்வாகி நிர்மல் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விளக்கம் கேட்கவும் போலீசார் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.