தேனி மாவட்டத்தில் அங்கன்வாடி உதவியாளர்கள், குறு அங்கன்வாடி
உதவியாளர்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் என 720 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் விண்ணப்பித்து இருந்தனர்.
இப்படி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டாரங்களில் இருந்து வரப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்தனர்.
அதன்பின் எட்டு வட்டாரங்களில் உள்ள பணியிடங்களுக்கான நேர்முக தேர்வும்
நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்டவர்களுக்கு பணி நியமனமும்
வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் பணியிடம் கிடைக்காத பலர் மாவட்ட அலுவலகத்தில் ஒரு புறம் மனு கொடுத்தும் வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் கம்பம் வட்டாரத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் குறிப்பிட்டதை மட்டும் ஒயிட் மார்க் வைத்து முறைகேடாக மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியதாக கம்பத்தில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயலட்சுமி மீது புகார் வந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அந்த விசாரணையில் விஜயலட்சுமி தான் விண்ணப்பங்களில் முறைகேடு செய்து இருக்கிறார் என தெரியவந்ததின் பேரில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரியான விஜயலட்சுமியை அதிரடியாக (சஸ்பெ ண்ட் )தற்காலிக பணி நீக்கம் செய்தார். அதோடு அந்த அலுவலகத்தில் உள்ள அலுவலர்களிடமும் விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் ஒரு நேர்மையான கலெக்டர். மாவட்டத்தில் பொறுப்பு ஏற்று ஆறு மாதத்திலேயே பல அதிரடி நடவடிக்கை எடுத்து சில அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தும் நேர்மைக்கு இலக்கணமாக இருந்து வந்த கலெக்டர் இந்த விசாரணையில் பாதை தவறி விட்டார். சரிவர விசாரணை செய்யாமலேயே ஒரு நேர்மையான பெண் அதிகாரியை சஸ்பெண்ட் செய்து விட்டார் என்ற பேச்சு கம்பம் நகரில் வெளிப்படையாக பேசப்பட்டு வருவதைக்கண்டு நாமும் விசாரணை களத்தில் இறங்கினோம்.
கம்பம் வட்டாரத்தில் மட்டும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவி பணியாளர்கள் என 98 இடங்கள் இருக்கிறது. இதற்கு 200க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். அதுபோல் எல்லா மாவட்டம் போலவே ஓபிஎஸ் மாவட்டத்தில் உள்ள பொறுப்பில் இருக்கும் கட்சிகாரர்கள் பலர் விண்ணப்பித்த மக்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி இருக்கிறார்கள்.
அதில் ஓபிஎஸ் ஆதரவாளர்களை விட கம்பம் சட்டமன்ற உறுப்பினரான
ஜக்கையன் ஆதரவாளர்கள் பலர் ஒரு அங்கன் வாடி பணி நியமனத்திற்கு தலா 2 லட்சம் முதல் 4 லட்சம் வரை வசூல் பார்த்து இருக்கிறார்கள். இப்படி மக்களிடம் வசூல் பார்த்த விண்ணப்பங்களுக்கு எம்.எல்.ஏ. ஜக்கையனிடம் சொல்லி கலெக்டர் மூலமாக போஸ்டிங் போட சொல்ல வேண்டும் என்பதற்காக எம்எல்ஏ ஆட்கள் கம்பத்தில் உள்ள வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள சில அலுலர்களை சரி செய்து பணம் வாங்கிய விண்ணப்பங்களுக்கு மட்டும் அடையாளத்திற்காக ஒயிட் மார்க் வைத்து இருக்கிறார்கள். இது திட்ட அதிகாரியான விஜயலட்சுமிக்கு தெரியாமலே மாவட்ட அலுவலகமான கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி விட்டனர். அதன் பின் தான் கம்பம் வட்டார விண்ணப்பங்களை ஆய்வு செய்த போது தான் ஒயிட் மார்க் அடையாளம் பல விண்ணப்பங்களில் இருப்பது தெரிந்து மாவட்ட கலெக்டர் பல்லவி காதுக்கு கொண்டு போய் இருக்கிறார்கள்.
இதனால் டென்ஷன் அடைந்த கலெக்டர் பல்லவி பல்தேவ் அந்த
வட்டாரத்திற்கு விண்ணப்பித்த மக்களிடம் செல் மூலம் தொடர்பு கொண்டு உங்க பெயர் என்ன? எந்த சென்டருக்கு விண்ணப்பித்து இருக்கிறீர்கள்.யாரும் பணம் கேட்டார்களா? யாரிடமும் பணம் கொடுத்து இருக்கிறீர்களா? என நான்கு கேள்விகளை கலெக்டர் கேட்டதில் தான் எம்.எல்.ஏ. ஜக்கையன் ஆட்கள் மூலம் பணம் கொடுத்த விஷயம் கலெக்டர் காதுக்கு போனதின் பேரில் தான் ஒயிட் மார்க் விஷயமும் கலெக்டருக்கு தெரிந்து இருக்கிறது.
அதன் அடிப்படையில் தான் கம்பம் வட்டாரத்தில் வந்த விண்ணப்பங்களுக்கு மட்டும் போஸ்டிங் போடாமல் மற்ற வட்டாரங்களில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவிபணியாளருக்கான காலி இடங்களுக்கு தகுதியின் அடிப்படையில் போஸ்டிங் போட்டு விட்டு, திட்ட அதிகாரியான விஜயலட்சுமியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து சஸ்பெண்ட் ஆர்டரையும் கோட்டூரில் உள்ள விஜயலட்சுமி வீட்டுக்கே கடந்த 25ம்தேதி போய் கொடுக்க சொல்லி இருக்கிறார் கலெக்டர்.
ஆனால் உண்மையிலையே இந்த விஷயம் விஜயலட்சுமிக்கு தெரியாது. கீழே உள்ள
அலுவலர்கள் சிலர் செய்த தவறுக்கு விஜயலட்சுமி பலிகடா ஆக்கப்பட்டு இருக்கிறாரே தவிர யாரிடமும் கை நீட்டமாட்டார். யாரிடமும் சத்தம் போட்டு கூட பேச மாட்டார். அந்த அளவுக்கு ஒரு நேர்மையான அதிகாரி தற்பொழுது எம்.எல்.ஏ. ஜக்கையன் ஆதரவாளர்களின் சூழ்ச்சிக்கு பலி கடாக்கப்பட்டு இருக்கிறார். அது தெரியாமல் கலெக்டர் பல்லவி பல்தேவ்வும் அந்த நேர்மையான அதிகாரிக்கு பரிசாக சஸ்பெண்டை கொடுத்து பாதை மாறிவிட்டார் என்பது தான் நமது விசாரணை யிலும் தெரிய வந்தது.