பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி நகையை பறித்ததாக கடந்த 2019 -ம் ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் புகார் கொடுக்கப்பட்டது.
அதன் பின்னரே பல பெண்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பது சில வீடியோக்கள் மூலம் வெளியானது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் திருநாவுக்கரசு என்கிறவன் முக்கிய குற்றவாளியாகவும், அதைத் தொடர்ந்து சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் என மூவர் கைது செய்யப்பட்டனர்.
முக்கியக் குற்றவாளியென சொல்லப்பட்ட திருநாவுக்கரசு தலைமறைவாகி பின்னர் கைது செய்யப்பட்டான். அதன் பின்னர் மார்ச் 26-ந் தேதி பொள்ளாச்சி ஜோதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே புகார் கொடுத்த பெண்ணின் அண்ணண் மீது தாக்குதல் நடத்தியதாக சொல்லப்பட்ட வழக்கில் பைக் டீலிங் பாபு, செந்தில், வசந்தகுமார் ஆகிய மூன்று பேரை அடிதடி வழக்கில் சேர்த்து கைது செய்தது பொள்ளாச்சி காவல்துறை.
அதே அடிதடி வழக்கில் சேர்க்கப்பட்ட மணிவண்ணன் என்பவன் தானே வந்து சரணடைந்தான். ஆனால் அவனும் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக பொள்ளாச்சி போலீசிடம் இருந்து சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி விசாரணை அதிகாரியான நிஷா பார்த்திபன் பாலியல் வழக்கிலும் மணிவண்ணனை சேர்த்தார்.
அதன் பின்னர் வானளவுக்கு நின்ற வன்கொடுமை வழக்கும், அடிதடி வழக்கும் சி.பி.ஐ யின் கைகளுக்கு சேர்ந்தது. இந்த அடிதடி வழக்கில் எங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அதனால்தான் இந்த அடிதடி வழக்கை நாங்கள் கை விடுகிறோம் என சி.பி.ஐ தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே அடிதடி வழக்கில் சேர்க்கப்பட்ட பார் நாகராஜ் விடுவிக்கப்பட்டது சர்ச்சையாய் இருக்கும் நிலையில் சி.பி.ஐ அறிக்கை இன்னமும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் அடிதடி வழக்கின் விசாரணை வருகிற பிப்ரவரி மாதம் 6-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. கூடவே அதே மாதம் 27- ந் தேதி பாலியல் வன்கொடுமை வழக்கும் விசாரணைக்கு வருகிறது. இதை எதிர்பார்த்து சேலம் சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் பாலியில் குற்றவாளிகள் கம்பிகளுக்கு வெளியே நாட்களை கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.