Skip to main content

போலீஸ் தாக்கியதில் கால் டாக்ஸி ஓட்டுநர் உயிரிழப்பு; தலைமை காவலர் கைது

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Policeman arrested in case of Call Taxi driver case in Chennai

சென்னை மதுரவாயல் அருகே காவலர் தாக்கியதில் கால் டாக்ஸி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கால் டாக்ஸி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வானகரம் சர்வீஸ் சாலையில் ஒரு பெண்ணுடன் ராஜ்குமார் பேசிக் கொண்டு நின்றுள்ளார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மதுரவாயல் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் ரிஸ்வான் ஓட்டுநர் ராஜ்குமாரிடம் விசாரித்துள்ளார்

அப்போது காவலர் ரிஸ்வானுக்கும் ஓட்டுநர் ராஜ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்பு வாக்குவாதம் முற்றிய நிலையில் காவலர் ரிஸ்வான் ஓட்டுநர் ராஜ்குமாரின் நெஞ்சில் மிதத்தாக தெரிகிறது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜ்குமாருடன் பேசிக்கொண்டிருந்த பெண் காவல் கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசியின் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் மயங்கி விழுந்த ராஜ்குமாரை ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வைத்துள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே ஓட்டுநர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.  ஆனால், ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த ராஜ்குமாரின் குடும்பத்தார் மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் மதுரவாயல் தலைமை காவலர் ரிஸ்வானை போலீசார் கைது செய்துள்ளனர். ஓட்டுநர் ராஜ்குமார் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், காவலர் ரிஸ்வான் தாக்கியதால்தான் ஓட்டுநர் ராஜ்குமார் இறந்த்து தெரியவந்ததையடுத்து, தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Rs. 4 crore confiscation issue; CBCID case registration

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் கடந்த 23 ஆம் தேதி (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; CBCID case registration

இது குறித்து நயினார் நாகேந்திரன் சென்னை தியாகராயர் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.

இத்தகைய சூழலில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேற்று (28.04.2024) கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

Rs. 4 crore confiscation issue; CBCID case registration

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக இந்த வழக்கில் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. விரைவில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.