Skip to main content

மாதவிடாய் நாளில் வீட்டுக்குள் வரக்கூடாது; அடாவடி மாமியாரிடம் சிக்கிய மருமகள் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 55

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Advocate santhakumaris valakku en 55

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.

ராதா என்கிற பெண் இரண்டாவது திருமணம் செய்தவர். என்னை பார்க்க வந்திருந்தார். ஆரம்பிக்கும் போதே தான் ஒரு ஐயர் பெண் என்று ஆரம்பித்தார். சாதியைக் குறிப்பிட ஒரு காரணம் இருக்கிறது என்றும், அது தன்னை எவ்வளவு பாதித்தது என்றும் சொல்ல வந்ததால் தான் குறிப்பிட்டு சொன்னேன் என்று தன் கதையை ஆரம்பித்தார். ராதா மூன்று டிகிரி வாங்கியவர், வேலை பார்க்கும் நல்ல திறமையானவர். முதல் திருமணம் தோல்வியில் முடியவே ஒரு சோர்வு வருகிறது. அதனால், தனியாக பெங்களூரில்தான் வேலை பார்த்து வருகிறார். 

அவளது பெற்றோர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி பேசி சம்மதிக்க வைத்து தன்னை போலவே இரண்டாவதாக வரன் பார்க்கும் பையனை பார்த்து பேச பிடித்து போகிறது. அவர்கள் ஐயங்கார் பிரிவினர். எனவே நாங்கள் வெங்காயம் சாப்பிடமாட்டோம். ரொம்ப ஆச்சாரமாக இருப்போம் என்றும் தன்னுடய பெற்றோர் மிகவும் வயதானவர்கள். தான் அவர்களை பார்த்து கொள்ள வேண்டும். எனவே தனிக் குடித்தனம் வரமுடியாது என்று சில கண்டிஷன் போடுகிறான். ராதாவும் குடும்பத்துடன்தான் வாழ வேண்டும் என்று விருப்பப்பட்டு ஒத்துக்கொண்டு மிக எளிதாக திருமணம் நடக்கிறது. 

வேலையும் விட சொல்கிறார்கள். அம்மா வீடு அதே சென்னையில் இருந்தாலும் அடிக்கடி போகக்கூடாது என்று வேறு சொல்லி விடுகிறார்கள். திருமணம் ஆகி போன நாளிலிருந்து வீட்டில் மாமியார் மிகவும் கெடுபிடி என்று புரிந்து கொள்கிறாள். அன்பாக பேசுவதே இல்லை. சமையல் அறையில் அவளுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. குளித்த பின்னரே தான் வீட்டிற்குள் வர வேண்டும் என்று உத்தரவு வேறு. மாமனார் அதிகமாக பேசுவதில்லை என்றாலும் போய் வர இருக்கும்போது மறைமுகமாக குத்திக் காட்டுவது என்று இருக்கிறது. காரணம், சாதி பிரிவில் தன்னை விட ஐயர் பிரிவினர் தனக்கு கீழே என்ற போக்கிலே அவளை நடத்துகிறார்கள். இரண்டாவது திருமணமும் தோல்வியில் முடியக்கூடாது என்று இவள் பொறுத்துப் போகிறாள். 

அந்தப் பெண்ணுக்கு, அளவான சாப்பாடே போடப்படுகிறது. மேலே பசித்தாலும் கிட்சனில் அனுமதி இல்லை. வெளியே வாங்கி கொள்ளவேண்டும் என்று கேட்டாலும், கணவன் அம்மாவிடம் பணம் கேட்டு கொள் என்கிறான். வீட்டிலே அடைந்து கிடக்க வேலைக்கு போக அனுமதி கேட்டதும் முதலில் கிடைக்கவில்லை. இவள் பார்க்கும் பார்மஸி வேலை சென்னையில் கிடைக்கவில்லை. ஒருநாள் வெளியே சென்று வீட்டிற்கு வந்தால் வீட்டை பூட்டி விட்டு குடும்பமாக சென்று விட்டு நெடு நேரம் இவளை வாசலிலே நிற்க வைத்து விடுகின்றனர். இதுபோல இனி நடக்காமல் இருக்க இன்னொரு சாவி மாமியாரிடம் கேட்டபோது அது இன்னும் ஒரு பெரிய பிரச்சனையாக ஆனது. இவள் மாதாந்திர மாதவிலக்கானால் மூன்று நாட்கள் உள்ளே அனுமதி இல்லை. அதனுடன் வேலைக்கு சென்று விட்டு வந்து இவர்கள் போடும் கண்டிஷனில் சிரமமாக தான் வாழ்கிறாள்.

பொறுக்க முடியாமல் இயலாமையால் இது போலதான் முதல் மனைவியையும் நடத்தினீர்களா? அதான் சென்றுவிட்டாளா? என்று கேட்டு விட, கணவன் தன் அம்மாவை எப்படி இது போல பேசலாம் என்று பேச்சாகி விட்டது. கணவனிடம் எதிர்பார்த்த அன்பு, அக்கறை எல்லாமே போய்விட்டது. இப்படியே ஒரு வருடம் போனது. பெங்களூரில் வேலை கிடைக்க சனி, ஞாயிறு மட்டுமே வீட்டிற்கு வருகிறாள். வந்திருக்கும் ஒருநாளில் சேர்த்து வைத்து கொடுமைகள் காட்டப்படுகிறது. கணவனிடமும் வாழ விடுவதில்லை. 

அந்தச் சமயம் எதிர்பாராதவிதமாக முதல் மனைவியின் சொந்தக்காரர் ஒருவரை, ராதா பெங்களூரில் ஒரு பார்ட்டியில் சந்திக்கிறாள். ஒருவரை ஒருவர் யார் என்று பகிரும்போது அவளுடைய கணவனின் முதல் மனைவியின் சொந்தக்காரர் என்று சொல்லி அந்த மாமியார் சேர்ந்து வாழவே விடமாட்டாள் என்கிறார். நாங்கள் கடைசியில் நாற்பது லட்சம் கொடுத்தோம் என்று சொல்லவும் இவளுக்கு பெரிய அதிர்ச்சி. எனவே சேர்ந்து வாழ வேண்டும் என்று பெட்டிஷன் போட்டு தனியாக வாழ வேண்டும் அல்லது வாரம் ஒரு முறை பெற்றோர் பார்க்க வரலாம் என்று கேட்டு பார்க்கிறாள். 

இந்தத் திருமணத்தை தக்க வைத்து கொள்ள பார்க்கிறாள். ஆனால் கணவன் சேர்ந்து வாழ விருப்பமில்லாமல் இருக்கிறான். மேலும், அவள் பயணம் செய்து வேலை பார்த்து திரும்புதலை காட்டி அவள் நடத்தையை சந்தேகமாக பேசுகிறான். நாங்கள் நிரந்தர ஜீவானாம்சம் கேட்டு பார்த்தோம். ஒரு பைசாக்கு கூட மறுத்தார்கள். இந்தப் பெண் வழக்குக்காக, பெங்களூரிலிருந்து சென்னை வந்து ரயில் நிலையத்தில் குளித்து என்று ரொம்ப சிரமப்பட்டாள். கவுன்சிலிங் வைத்தபோது கூட கணவன் தன் பெற்றோரைக் கூட்டி வரவில்லை. மீடியேஷன் போட்டு இறுதியாக ஐந்து லட்சம் ஒத்துக் கொண்டார்கள். ம்யூச்சுவல் கன்செண்ட் போட்டு கடைசியாக விவாகரத்து ஆனது.