
ஆந்திராவைச் சேர்ந்த நபர் ஒருவர் அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடைய மனைவியிடம் காவலர் ஒருவர் ஜிபே-வில் லஞ்சம் கேட்டது தொடர்பான ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திராவில் இருந்து அரசு பேருந்து ஒன்றில் 10 கிலோ கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து திருத்தணி பொன்பாடி சோதனை சாவடியில் போலீசார் அரசு பேருந்தை சோதனை செய்த பொழுது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரையும் ஒரிசாவை சேர்ந்த ஸ்வஸ்திகா என்ற பெண்ணையும் கைது செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சரவணனின் மனைவி கீதாவை தொடர்பு கொண்ட திருத்தணி காவல்நிலைய காவலர் பெருமாள் என்பவர் அவரிடம் ஜிபேவில் பணம் அனுப்பும்படி பேசும் ஆடியோ பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஆடியோவில் 'அனுப்புறேன்னு சொன்னமா ஏன் இன்னும் அனுப்பல?' எனக் கேட்க, 'இன்னும் வைக்கல சார் வச்ச உடனே அனுப்புறேன் சார். கொஞ்சம் உடம்பு சரியில்ல. ஹாஸ்பிடலுக்கு கிளம்பி கிட்டு இருக்கேன் சார். இன்னும் பத்து நிமிடம் கழித்து நானே பண்றேன் சார்' என அப்பெண் பதில் சொல்கிறார். 'சரி நீ உன் வேலையை பாரு' என பதிலுக்கு காவலர் பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.