
வைகுண்டர் 193 வது அவதார திருநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் பாளையங்கோட்டையில் சப்பர ஊர்வலத்தின் போது காவல்துறையை கண்டித்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அய்யா வைகுண்டரின் 193 வது அவதார பெருவிழா இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கோட்டூர் ரோட்டில் சொக்கலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. அதில் அய்யா வைகுண்டர் கோவிலும் கட்டப்பட்டுள்ளது. அதற்கான வழிபாடும் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அந்த கோவிலில் அன்னதானம் செய்து வழங்க காவல்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.
இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், நீதிமன்றம் கோவிலுக்குள் இரண்டு தரப்பினரும் சமையல் செய்யக் கூடாது என தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று அவதார திருநாளை முன்னிட்டு உள்ளே சமைத்து அன்னதானம் வழங்க அனுமதி வழங்க வேண்டும் என வைகுண்டர் பக்தர்கள் கோரியிருந்தனர். ஆனால் காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் சப்பர ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, ஊர்வலம் வந்த பக்தர்கள் திடீரென சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் பக்தர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.