உலகில் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் எமனாக அச்சுறுத்தும் கரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது. நமது தமிழகத்தில் அதன் தாக்கம் மார்ச் மாதம் முதலே தொடங்கி, தற்போது 690 பேர் வரை உயர்ந்துள்ளது. இந்திய அளவில் 7 வது இடத்தில் தமிழகம் உள்ளது. இந்த கரோனா வைரஸ் சாதி, மதம் பார்க்கவில்லை, மனிதர்களின் நம்பிக்கையான கடவுள் குடிகொண்டிருக்கும் கோயிலையையும் விட்டு வைக்கவில்லை. எங்கெல்லாம் மனிதர்கள் வருவார்களோ அங்கெல்லாம் காத்திருப்பேன் என்பதுபோல மிரட்டுவதால் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் தொடங்கி சபரிமலை அய்யப்பன் கோவில் வரை கோவில்களின் நடைகள் சாத்தப்பட்டது.
தமிழக்தில் பிரபலமான பழனி முருகன், மதுரை மீனாட்சி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் என எல்லா கோயில்களும் கரோனா வைரஸ் கொடூரத்தால் மூடப்பட்டுவிட்டன. இந்நிலையில் ஒவ்வொரு கோயிலுக்கும் சில தனிப்பட்ட நிகழ்வுகள் முக்கியமானதாக இருக்கும். அப்படிப்பட்டதுதான் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கிரிவலம்,
ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இந்தக் கோயிலில் கிரிவலத்துக்காக வரும் மக்கள் எண்ணிக்கை என்பது குறைந்தபட்சம் இரண்டு லட்சம் முதல் அதிகபட்சம் 5 லட்சம் வரை. சில விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை 10 லட்சமாககூட உயரும். இந்த நிலையில், தமிழ் வருடத்தின் கடைசி பௌர்ணமியான இன்று, பங்குனி மாத பௌர்ணமி உள்ளது. இன்றையதினம் பெரும்பாலும் பல லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நடந்து சென்று அவர்களது வேண்டுகோளை கடவுளிடம் வைப்பது தொடர்ந்து நடந்து வந்தது. ஆனால் இந்த வருடம் கிரிவல ஊர்வலத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை மிகவும் முன்னெச்சரிக்கையாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்து கிரிவலப்பாதை அமைந்துள்ள அனைத்து இடங்களிலும் அங்கு முகாமிட்டுள்ள வெளி நபர்களை கண்டறிந்து அவர்களை வெளியேற்றினார்கள்.
அதேபோல் திருவண்ணாமலை என்றால் ஆன்மீக நகரம் என்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில ஏன் வெளிநாட்டவர்கள்கூட இந்த பௌர்ணமி நாளில் வந்து கிரிவலப் பாதையில் நடந்து செல்வது வழக்கம். இங்கு ஏற்கனவே தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டவர்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி தலைமையிலான குழு கண்டறிந்து அவர்களை அந்தந்த நாட்டின் தூதரகத்திற்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் இன்று இரவு நடைபெறும் இந்த கிரிவல நிகழ்ச்சி ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் இந்த கிரிவலத்தில் கலந்துகொள்ளக்கூடாது, யாரும் நடந்து செல்லக்கூடாது என்பதால் போலீசார் கிரிவலப் பாதை முழுக்க நிறுத்தப்பட்டு மிகவும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
தற்போது தமிழகத்தில் இந்த வைரஸ் தொற்று பரவலாக அதிகரித்து வரும் நிலையில், இந்த மாத தொடக்கத்தில் திருவண்ணாமலையில் ஒருவருக்கு மட்டுமே தொற்று என்ற நிலையில் இருந்தது. இன்று 5 பேர் என்ற அதிகரித்துள்ளது. மேலும், யாருக்கும் தெரியாமல் வெளிநாட்டினர் ரகசியமாக தங்கி இருக்கிறார்களா என்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் உள்ளனர். இதில் மாவட்ட எஸ்.பி. சிபிசக்ரவர்த்தி கடந்த 3 நாட்களாக தொடர்ந்து இந்த கிரிவலப் பாதையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார். கடந்த பல வருடங்களாக பக்தி மார்க்கத்தில் உள்ள மக்கள் திருவண்ணாமலைக்கு சென்று, கிரிவலம் வந்தால் துன்பங்கள் தீரும் என்ற நம்பிக்கையில் உள்ள மக்கள் இந்த வருடம் கிரிவலம் போக முடியாத வேதனையில் இருக்கிறார்கள். கடவுளையும் மிஞ்சிய இந்த வைரஸ் மக்களை அவர்களின் நம்பிக்கையை உடைத்து விட்டது என்பதுதான் உண்மை.
திருவண்ணாமலையில் இன்று முதல் நாளை இரவு வரை மாவட்ட காவல்துறை மிகுந்த கவனத்தோடு இங்கு யாரும் நடமாடக்கூடாது என்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.