ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று 6ந் தேதி பவானி, காலிங்கராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 55 வயது சக்திவேல் தனது மனைவி தனலட்சுமி மற்றும் மகனுடன் வந்திருந்தார். திடீரென அவர் கொண்டு வந்திருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக ஓடி வந்து அவரிடமிருந்து பாட்டிலைப் பிடுங்கி தண்ணீரை அவர் மீது தெளித்தனர். இது குறித்து சக்திவேல் கூறும்போது, “நான் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறேன்.
எனக்கு பவானி காலிங்கராயன்பாளையம் ஆற்றுப்பகுதி ஓரமாக 6 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் சொந்த வீடு கட்ட முயற்சி செய்து முதற்கட்டமாக கையில் இருக்கிற பணத்தை வைத்து வீடு கட்டினேன். மேற்கொண்டு ரூபாய் 3 லட்சத்து 80 ஆயிரம் பணம் தேவைப்பட்டது. இதையடுத்து வீடு கட்டும் புரோக்கர் ஒருவர் எனக்கு அறிமுகமானார். அவர் நான் வீடு கட்ட உங்களுக்கு பணம் தருகிறேன் ஆனால் எங்கள் பெயரில் உள்ள நிலத்தை அவரது பெயரில் கிரையம் செய்து கொடுக்க வேண்டும் என்றார். அதனை நம்பிய நாங்களும் அவரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அவரது பெயரில் கிரையம் செய்து கொடுத்தோம்.
பின்னர் வீடு கட்டினோம். இன்னும் மூன்று மாதத்தில் உங்கள் பணத்தைத் திருப்பித் தந்து விடுகிறோம். எங்கள் நிலத்தை எங்கள் பெயரிலேயே கிரையம் செய்து கொடுக்க வேண்டும் என்று அவரிடம் கூறினோம். ஆனால் அவர் எங்களது பெயரில் நிலத்தை எழுதி கொடுக்காமல் காலம் தாழ்த்தி ஏமாற்றி வருகிறார். இது தொடர்பாக ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் பல புகார் செய்துள்ளோம். இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. எங்களிடம் ஏமாற்றி வாங்கிய எங்கள் நிலத்தை எங்கள் பெயரில் மாற்றி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சூரம்பட்டி போலீசார் சக்திவேலை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.