தமிழ் இலக்கியத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான கி.ரா. எனும் கி. ராஜநாராயணன் உடல்நலக் குறைவின் காரணமாக நேற்று (17.05.2021) இரவு காலமானார். அவருக்கு வயது 98. இவரது மறைவுக்குப் பல்வேறு தலைவர்களும் எழுத்தாளர்களும் அவரது வாசகர்களும் மிகுந்த வருத்தத்துடன் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில் கவிஞர் சிற்பி, எழுத்தாளர் கி.ரா.வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “தமிழின் தனிப் பெரும் படைப்பாளி, எங்கள் முன்னத்தி ஏர் என்று கரிசல் எழுத்தாளர்கள் கொண்டாடும் பழுத்த எழுத்தின் நாயகன், வட்டாரத் தமிழுக்கு வனப்பும் பெருமையும் உண்டு என்று நிறுவிய மொழியின் தந்தை, கோபல்ல கிராம இதிகாசம் தந்த நிகரற்ற கதை சொல்லி எண்ணமாகவும் எழுத்தாகவும் நமக்குள் நிறைந்தார்.
தாமரை அந்த நாளிலேயே ராயங்குலஶ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமாநுஜ நாயக்கர் என்ற கி.ரா.அவர்களை அட்டைப் படத்தில் அழகாக கௌரவித்தது. பத்தோடு பதினொன்றாக எழுத்துலகம் கருதியிருந்த கி.ராவை விடாப்பிடியாகப் பதிப்பித்து கவனத்துக்குக் கொண்டுவந்த அன்னம் மீராவை என்றும் மறக்க முடியாது. சாகித்ய அகாதமி விருதுவரை கொண்டுவந்துவிட மீராவின் பதிப்புகளே காரணம். அன்று அவருடைய ‘வேட்டி’யைப் படித்து விழுந்து விழுந்து சிரித்த வாசகர்களில் நானும் ஒருவன்.
அவருக்கு மதுரையில் மணிவிழா நடத்தி மகிழ்ந்தவர் மீரா. அன்று மணிவிழாப் பொற்கிழியை வழங்க வேண்டிய அமைச்சர் காளிமுத்து வரமுடியாமல் போனபோது, அந்தப் பண முடிப்பை அவருக்கு வழங்கும் பேறு பெற்றேன். அதனால் அவருடைய துணைவியாருக்கு என்னை அறிமுகப்படுத்தும்போதெல்லாம், ‘மதுரையிலே நமக்குப் பணமுடிப்புக் கொடுத்தவரு” என்று கூறுவார்.
காலம் எங்கள் சந்திப்புகளின் இடையே இடைவெளிகளை ஏற்படுத்தியது. என்றாலும் மகத்தான கதை சொல்லியை நான் மறந்ததே இல்லை. சாகித்ய அகாதமி பொதுக்குழு உறுப்பினராக அவரைத் தெரிவு செய்ததிலும் என் பங்கு உண்டு. ஓய்வறியாத இடைசெவல் இலக்கியப் படைப்பாளியைக் காலம் ஓய்வெடுக்க அழைத்துக்கொண்டது. நன்றி மறவாத இப்பெருமகன் தன் கடைசி மிச்சக் கதைகளை மீரா கதிரிடமே வெளியிடத் தந்தது மிகவும் பொருத்தமே. கடைசி நாட்களில் உடனிருந்து காத்த புதுவை இளவேனிலுக்கு தமிழ் இலக்கிய உலகம் கடமைப்பட்டிருக்கிறது. காருகுறிச்சியின் நாதசுர ஆலாபனை போல் இலக்கிய இதயங்களில் கி.ரா., உள்ளத்தை அள்ளும் மோகன ராகமாக ஒலித்துக்கொண்டே இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.