
சேலம் அருகே, 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய காதல் கணவர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள வெள்ளியம்பட்டியைச் சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ் (22). இவர், அதே பகுதியைச் சேர்ந்த உறவுக்காரர் ஒருவரின் 15 வயது மகளை காதலித்து வந்தார். சிறுமியை கடந்த ஆண்டு மே 13ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்கள் தனியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து சிறுமியை சேலம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.
பதினெட்டு வயது பூர்த்தி அடையாத சிறுமி கர்ப்பமானதை அறிந்த மருத்துவர்கள், இதுகுறித்து காவல்துறைக்கும் குழந்தை திருமணத் தடுப்புப் பிரிவு அலுவலர்களுக்கும் தகவல் அளித்தனர். அதன்பேரில் சிறுமியின் கணவர் பிரகாஷ்ராஜ் மீது காரிப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த பிரகாஷ்ராஜ் திடீரென்று தலைமறைவானார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.