Skip to main content

சட்டவிரோத மணல் கொள்ளை; அமைச்சர் துரைமுருகன் பதவி விலக வேண்டும்- -பாஜக வலியுறுத்தல்

Published on 27/02/2025 | Edited on 27/02/2025
Illegal sand mining; Minister Duraimurugan should resign- -BJP insists

'தமிழகத்தில் தடையின்றி நடந்து வரும் மணல் கொள்ளைக்கு பொறுப்பேற்று அமைச்சர் துரைமுருகன் பதவி விலக வேண்டும்'  என்று ஆவேச அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் தொடரும் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்க தவறிய, மாநிலம் முழுக்க மணல் கொள்ளையர்களுக்கு உடந்தையாக நீர்வளத்துறை அமைச்சக அதிகாரிகளும் , தமிழகத்தின் பல்வேறு மாவட்ட அரசு நிர்வாகத்தினரும் செயல்பட்டு தமிழகத்தின் மண் வளம் சுரண்டப்படுவதால், நிர்வாக சீர்கேட்டிற்கு முழு காரணமாக விளங்கும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

ஒருவேளை மூத்த ஊழல் அமைச்சரை நீக்குவதற்கு முதல்வருக்கு தயக்கம் ஏற்பட்டால், மனசாட்சியுடன் எந்தவித சுற்றுச்சூழல் அனுமதியும் பெறாமல், சட்டவிரோதமாக மணல் கொள்ளை  தமிழகத்தில் இரவும் பகலாக நடப்பதற்கு காரணமாக இருந்து, விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மணல் வளத்தையும் நிலத்தடி நீரையும் பாதுகாக்க தவறிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தார்மீக பொறுப்பேற்று தானே பதவி விலக வேண்டும்!

தமிழகம் முழுவதும் தற்போது வரலாறு காணாத மணல் கொள்ளைகள் முழுவீச்சில் அரங்கேறி வருகின்றன. நீர்வளத் துறையின் அமைச்சரே மணல் வளத்தை திருடுபவர்களுக்கு, கனிம கொள்ளையர்களுக்கு துணை போவதால் தமிழக அரசு அதிகாரிகளின் சிவப்பு கம்பள விரிப்புடன், உச்சநீதிமன்ற எச்சரிக்கையையும் மீறி மணல் கொள்ளை தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது.

தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் இரவு நேரங்களில் பொக்லைன் இயந்திரம் வாயிலாக லாரிகளில் மணல் கடத்தல் போடுகிறது. மிக முக்கியமாக மணல் கொள்ளை நடக்கும் பகுதி அருகில் முடியனூர் மற்றும் எட்டு வழியோர குடியிருப்பு கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் பன்னாரி அம்மன் சர்க்கரை ஆலைக்கு தண்ணீர் அனுப்பும் திட்டம் போன்றவை செயல்படுத்தப்படும் இடத்தின் அருகிலேயே பல மீட்டர் ஆட்டத்திற்கு பள்ளம் தோண்டி மணல் கடத்தப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.

மேலும் மணலூர்பேட்டை அடுத்த சித்தப்பட்டிணம் ஏரியில் இரவு பகலாக பொக்லைன் இயந்திரம் வாயிலாக கிராவல் மண் தோண்டப்பட்டு லாரிகளில் கடத்தப்படுகிறது.இதனால் தென்பெண்ணையாற்றில் பல ஆண்டுகளாக செயல்பட்ட சட்டவிரோத மணல் குவாரிகளால் கட்டாம் தரையான ஆற்றுப்பகுதி இயற்கை அன்னையின் அருளால் கடந்த நவம்பர் மாதம் பின்ச் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றில் மணல் குவிந்து நிலத்தடிநீரை இயற்கை அன்னை தனக்குத் தானே திட்டமாக, நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையில் இயற்கையின் சமநிலைப்பாடு துவங்கிய சில மாதத்திலேயே பெண்ணையாறு மீண்டும் கட்டாந்தரையாகி நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Illegal sand mining; Minister Duraimurugan should resign- -BJP insists

அதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில்  முள்ளக்காடு கடற்கரை பகுதியில் பொக்லைன் இயந்திரங்களால் முறைகேடாக மண் அள்ளப்பட்டு ஏராளமான லாரிகளில் தினமும் ஆயிரக்கணக்கான உப்பளங்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லாரி லோடுமன் 5000 முதல் 7000வரை ஏறத்தாழ 10 ஆயிரம் உப்புளங்களுக்கு சட்டவிரோதமாக விற்கப்படுகிறது. இதனால் ஏறத்தாழ தமிழக அரசுக்கு 200 கோடி முதல் 300 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பத்திரிகை மட்டும் தொலைக்காட்சி ஊடகங்களில் படத்துடன் செய்தி வெளிவந்தும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகம் நீர்வளத்துறை அமைச்சர் நீர்வளத் துறை நிர்வாகம், ஒட்டுமொத்த தமிழக அரசு இயந்திரமும் கண்டுகொள்ளாமல் கனிம வள கொள்ளையர்களுக்கு துணை போவது அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த காலங்களில் மதுரை,திருப்பூர், திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மணல் கொள்ளை நடப்பதை வெட்ட வெளிச்சமாக ஏற்கனவே ஊடகங்கள் தொடர்ந்து வெளிச்சம் போட்டு காட்டியும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால், இந்த மாவட்டங்களை தொடர்ந்து தற்பொழுது கள்ளக்குறிச்சியிலும் தூத்துக்குடியிலும் சட்டவிரோத மணல் கொள்ளை தலை விரித்து ஆடுகிறது.

சட்டவிரோத மணல் கொள்ளை குறித்த தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையை மீறி தற்போது தமிழகத்தில் மணல் கொள்ளை நடந்து வருவது ஒரு ஆபத்தான அறிகுறி மற்றும் தமிழகத்தில் மிக மோசமான சட்ட மீறல் நடைபெறுவதற்கு சாட்சியாக அமைந்துள்ளது.

தமிழன்னையின் கால்களை வெட்டி ரத்தம் குடிக்கும் மணல் கொள்ளையர்களை தமிழக முதல்வர் கண்டிக்காதது ஏன்? மணல் கொள்ளையால் சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கப்படுவதுடன், விவசாய நிலங்கள், உப்பளங்கள் பயனற்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றன. அரசு நிர்வாகத்தின் உரிய அனுமதி இன்றி, லைசென்ஸ் அளவைத் தாண்டி இவ்வாறு நடக்கும் கொள்ளையை அரசு நிர்வாகங்கள்
கண்டுகொள்ளாமல் இருப்பது நியாயமா?

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்கள் இல்லாமல், பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல், இதுபோன்ற சட்டவிரோத மணல் கொள்ளைகளால் சுற்றி இருக்கக்கூடிய கிராம மக்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவு பாதிக்கப்பட்டும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?

தமிழக முழுதும் நீர் நிலைகளில் பல்வேறு ஏரி,குளம் - குட்டைகளில் வண்டல் மண் அள்ளுவதற்கு குறிப்பிட்ட அளவுக்கு லைசென்ஸ் பெற்று, வண்டல் மண், களிமண் இல்லாத குளம், குட்டைகளிலும், விதிகளை மீறி  சட்டவிரோதமாக கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. மணல் கொள்ளையில் ஈடுபட்டோருக்கு வழங்கப்பட்ட  லைசென்ஸ் ரத்து செய்ய  நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆணை பிறப்பிக்காதது ஏன்?

அரசு நிர்வாகத்தின் உரிய அனுமதியின்றி, லைசென்ஸ் அளவைத் தாண்டி இவ்வாறு நடக்கும் கொள்ளையை அரசு நிர்வாகங்கள் தடுக்காமல், மறைமுகமாக ஆதரவு அளிப்பதால் விவசாய நிலங்கள் அழிந்து வருகின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகிறது.

*சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் இல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்கள் இல்லாமல், பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல், இதுபோன்ற மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. குறிப்பாக இது போன்ற சட்டவிரோத மணல் கொள்ளையை இரும்பு கரம் கொண்டு  அடக்க வேண்டும் என்று வாய்ச்சொல் மாவீரர் அமைச்சர் சேகர்பாபு குரல் கொடுக்காதது ஏன்?

தமிழகத்தில் மணல் கொள்ளை குறித்து தொடர்ந்து பல்வேறு ஆதாரங்களுடன் பத்திரிகை மற்றும் தொலைக் காட்சிகளில் செய்திகள் வந்த போதும், மாவட்ட நிர்வாகமும், கனிம வளத்துறையும் மற்றும் நீர்வளத்துறை  அமைச்சரும் சட்டவிரோத மணல் திருட்டு குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை
சுட்டிக்காட்டி,  தட்டி கேட்காமல், சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் தமிழக முதல்வர் அமைதி காப்பது ஏன் ?

ஏரி,குளம், குட்டையில் வண்டல் மண், களிமண் உள்ளதா? கடைசியாக எப்பொழுது இங்கு அரசு அனுமதிக்கப்பட்டு மணல் எடுக்கப்பட்டுள்ளது? தற்போது அதில் எவ்வளவு யூனிட் மண் எடுக்கலாம் என்பது குறித்து, முன்கூட்டியே ஆய்வு செய்து, அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்களின் தடையிலா சான்று பெற்று, அதன் அடிப்படையில், மண் அள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
மண் அள்ளும் பணியை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டும், நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் பல மடங்கு கிராவல் மண் திருடப்படுகிறது.

அரசாங்க ரசீதுகளை போலியாக அச்சடித்து பல ஆயிரம் லோடு மண் கொள்ளை அடிக்கப்படுகிறது. இதனால் குளம் - குட்டைகள் அனைத்தும் குவாரிகள் போன்று ஆழமாக்கப்பட்டுள்ளன. இதனால் பல இடங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு அழிவு நிலைக்குச் சென்றுள்ளது. தமிழன்னையின் கனிம வளத்தை சுரண்டி கொள்ளை அடித்த மணல் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படாதது ஏன்?

தமிழகம் முழுவதும் வண்டல் மண் அள்ள அரசு அறிவித்த விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாமல், வணிக ரீதியாக கிராவல் மண் கொள்ளையடிக்கப்படுகிறது என புகார் சமூக ஆர்வலர்களால் தெரிவிக்கப்பட்டு, இதை கண்காணித்து தடுக்க வேண்டிய அரசுத்துறை அதிகாரிகளும் மவுனம்
மௌனம் காத்து, மணல் கொள்ளையை தட்டி கட்ட மண்ணின் மைந்தர்கள் படுகொலை செய்யப்பட்டபோது காவல்துறை கைகட்டி நின்றது நியாயமா?

கனிம வளம் திருடு போவது கண்காணித்து தடுக்க வேண்டிய ஊரக வளர்ச்சி, வருவாய்த்துறை, கனிம வளம், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மணல் கொள்ளைக்கு துணையாக நிற்பது ஊழல் திமுக அரசின் நிர்வாக சீர்கேடுக்கு முக்கியச் சான்று என்பதை தமிழக அரசு உணரவில்லையா?

சட்டவிரோத மணல் கொள்ளையை தட்டிக் கேட்டு, சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, காவல்துறையில் புகார் அளிக்கும் சமூக ஆர்வலர்கள் அரசியல்வாதிகள் மற்றும் துணிவுடன் பணியாற்றும் சப் கலெக்டர் தொடங்கி, தாசில்தார் முதல் கிராம நிர்வாக அலுவலர்கள் வரை பலர் கொலை முயற்சிக்கு ஆளாகி, ஒரு சிலர் படு பயங்கரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொலையாளிகள் எந்தவித பயனும் பயமும் இல்லாமல் காவல்துறை அதிகாரிகள் முன்பு சரணடைந்து ஜாமீனில் வெளிவந்து மீண்டும் மணல் கொள்கையை தடுக்கும் அனைவரையும் மிரட்டுவது திராவிட மாடல் அரசில் சர்வசாதாரணமாக நடைபெறுவது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய என்பது காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வருக்கு தெரியாதா?

தமிழகத்தில் நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த எம்.அழகர்சாமி என்பவர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், 2024 டிசம்பர் 22ஆம் தேதி தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்கள் விரிவான, முழு தகவல்களுடன் கூடிய அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து 2025 ஜனவரி 27 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு என்ன பதில் அளித்தது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,  உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைக்கு உரிய மதிப்பளித்து, தமிழக அரசு தானாக முன்வந்து மணல் கொள்ளை குறித்து விசாரணை செய்ய,  ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரித்து, தனது ஆட்சியில் தன் கண்ணெதிரே நடக்கும் மணல் கொள்ளையை உடனடியாக தடுக்க முற்பட வேண்டும்.

*ஏற்கனவே தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் மூலம் கொள்ளை அடிக்கப்பட்ட ஊழல் ஊழல் பணம் ₹4,730 கோடி அளவுக்கு பல்வேறு பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபி அவர்களிடமும் ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளது.

இது குறித்து தமிழக காவல்துறையும், தமிழக அரசும் எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. மேலும் மணல் கொள்ளையும் தொடர்ந்து தங்கு தடையில்லாமல் நடைபெற்று வருகிறது.

*எனவே தமிழக விவசாயிகளின் நலத்தை பேணிக்காக்கும் வகையில், நிலத்தடி நீர் ஆதாரத்தை முழுமையாக பாதுகாக்கும் வகையில், தமிழகத்தில் சட்ட விரோத மணல் கொள்ளைக்கு முழு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மணல் கொள்ளையை தடுக்க முனைந்து படுகொலை செய்யப்பட்டுள்ள சமூக ஆர்வலர்கள் அரசு அதிகாரிகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்' என்று அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

 

சார்ந்த செய்திகள்