
தபால் நிலையங்களில் தனி நபர் அடையாள அட்டையை 250 ரூபாய் சேவைக் கட்டணத்தில் பெற முடியும் என அறிவித்துள்ளது தபால்துறை. இதுகுறித்து சேலம் மேற்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருணாசலம் கூறியதாவது:
‘கரோனா காலத்திலும் பொதுமக்களுக்கு கடிதங்கள், பார்சல்கள் வழங்குவது மட்டுமின்றி, சேமிப்பு திட்டங்களில் முதன்மையாக தனது அனைத்து சேவைகளையும் அஞ்சல்துறை தங்கு தடையின்றி வழங்கி வருகிறது. சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய முடியாதவர்கள், சபரிமலை பிரசாதத்தை 450 ரூபாய் முதல் 4500 ரூபாய் வரை பல்வேறு கட்டணங்களில் தபால் நிலையங்களில் முன்பணம் செலுத்தி தபால் வழியாக பெற்றுக்கொள்ளலாம்.
மற்றொரு சேவையாக அஞ்சலக அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அட்டையைப் பெற, விண்ணப்ப கட்டணமாக 20 ரூபாயும், அடையாள அட்டை கட்டணமாக 250 ரூபாயும் செலுத்த வேண்டும். இதைப் பதிவு தபால் மூலம் பெற கூடுதலாக 22 ரூபாய் செலுத்த வேண்டும்.
இந்த அடையாள அட்டை 3 ஆண்டுகளுக்கு செல்லுபடி ஆகும். ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்யவும், இதனை ஒரு சான்றாக பயன்படுத்தலாம். சேலம் மேற்கு அஞ்சல் கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் இந்த அஞ்சலக அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். ராசிபுரம் தபால் நிலையத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் பாஸ்போர்ட் சேவை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவைகளைப் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.’ இவ்வாறு கண்காணிப்பாளர் அருணாசலம் கூறினார்.