
பெரியார் பல்கலையின் கீழ் இணைவு பெற்ற கல்லூரிகளில் நடத்தப்பட்ட செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.
சேலம் பெரியார் பல்கலையில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு, நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் இணைவு பெற்று செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் 1.50 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும். கரோனா தொற்று அபாயம் காரணமாக கடந்த ஆண்டு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டன. செமஸ்டர் தேர்வுகளும் கல்லூரிகளில் நடத்தப்படாமல், ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. வீட்டில் இருந்தபடியே தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் அதை பிடிஎப் வடிவத்திற்கு மாற்றி அவரவர் கல்லூரிக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், செமஸ்டர் தேர்வு முடிவுகள் பிப். 5- ல் வெளியிடப்பட்டது. பல்கலையுடன் இணைவு பெற்ற கல்லூரிகளில் படித்து, ஆன்லைன் மூலம் தேர்வை எழுதிய, இளநிலை இரண்டாம் ஆண்டு, இறுதியாண்டு, முதுநிலை இறுதியாண்டு மற்றும் படிப்புக்காலம் முடிந்து சென்ற மாணவர்களின் தேர்வு முடிவுகளை பல்கலை துணைவேந்தர் குழந்தைவேல் வெளியிட்டார்.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.periyaruniversity.ac.in என்ற பெரியார் பல்கலை இணையதள மூலமும், இணைவு பெற்ற கல்லூரிகளின் இணையதளம் மூலமும் அறிந்து கொள்ளலாம்.