திருச்சி மாவட்டம், இனாம் குளத்தூரில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்களால் காவிச்சாயம் பூசப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த மணிகண்டம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "திருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டுள்ளது. பெரியார் பிறந்தநாள் அன்றுதான் தமிழக பிஜேபி தலைவர் முருகன், “பெரியார் சமூகநீதிக்காக பாடுபட்டவர். அவரை வாழ்த்துவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை” என்றார். இதுதான் அவர்கள் பெரியாருக்கு காட்டும் மரியாதையா? நீட்,புதிய கல்விக் கொள்கை, விவசாயிகள் போராட்டம் இவற்றுக்கான உங்கள் பதில் பெரியார்தானா? என்று குறிப்பிட்டுள்ளார்.