தமிழகத்தில் நடப்பது கொள்ளை கும்பலின் ஆட்சி மட்டுமல்ல; தூத்துக்குடியில் போராடிய 13 பேரை சுட்டுக்கொன்ற கொலைகார கும்பலின் ஆட்சியும்தான் நடக்கிறது என்று நடிகர் வாசு விக்ரம் சேலத்தில் நடந்த பரப்புரையின்போது பேசினார்.
சேலம் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடிகர் வாசு விக்ரம் சேலத்தில் சனிக்கிழமை மாலை (ஏப்ரல் 6, 2019) பல இடங்களில் திறந்த வாகனத்தில் சென்றபடி வாக்கு சேகரித்தார். மக்கள் கூட்டம் நிரம்பியுள்ள இடங்களில் அவர் சில நிமிடங்கள் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
முத்தமிழ் அறிஞர் கலைஞர் மறைந்து விட்டார் என்றாலும், அவர் மக்களுக்கு அளித்த பல்வேறு நலத்திட்டங்கள் மூலமாக இன்றும் நம் ஒவ்வொருவரின் வீடுகளிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். கலைஞரின் மறு உருவமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் நடைபெற்று வருவது அதிமுக ஆட்சி அல்ல. அது மோடியின் அடிமை ஆட்சி.
இந்த ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. இப்போதுள்ள ஆட்சி கொள்ளை அடிக்கும் ஆட்சி மட்டுமல்ல. இது, கொலைகார ஆட்சி. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய 13 பேரை சுட்டுக்கொன்றதும், கொடநாட்டில் கொலை செய்த சம்பவங்களுமே கொலைகார ஆட்சி என்பதற்கு சான்றாகும்.
கடந்த காலங்களில் திமுக சொன்னதை எல்லாம் செய்தது. அதேபோலதான், தற்போது தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றும். மத்தியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி செய்த பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரி விதித்து தொழில்களை முடக்கி விட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்திற்கு வராத பிரதமர், இப்போது தேர்தலுக்காக மட்டுமே வந்து செல்கிறார். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை காப்பாற்ற முடியாது. தமிழக அமைச்சர்கள் மோடிக்கு அடிமையாகவே செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு நடிகர் வாசு விக்ரம் பேசினார்.