தமிழக – ஆந்திர எல்லையான பேரணாம்பட்டு அடுத்த பந்தலப்பள்ளி மலைப்பாதையில் கண்டெய்னர் லாரி ஒன்று மலையில் இருந்து உருண்டு கீழே விழுந்துள்ளது. அதில் பயணம் செய்த லாரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டெய்னருக்குள் மைதா மாவு மூட்டைகள் இருந்ததாக வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களுரூவில் இருந்து சென்னைக்கு மைதா மாவுகளை ஏற்றிக்கொண்டு வேலூர் காட்டிபாயை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு சொந்தமான கண்டெய்னர் லாரி பயணமானது என்றும், அதனை திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பக்கிரிபாளையத்தை சேர்ந்த பஷீர்அகமது என்பவர் ஓட்டி சென்றார் என்றும், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் மலைப்பாதையில் இருந்து உருண்டு விழுந்து சம்பவயிடத்திலேயே ஓட்டுநர் உயிரிழந்துள்ளார் எனக்கூறப்படுகிறது.
அவரது உடலை கைப்பற்றிய போலீஸார் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு டூ சென்னை தேசிய நாற்கர நெடுஞ்சாலை இருக்கும்போது அந்த வழியை விட்டுவிட்டு, பாதை சரியில்லாத வழியில் அதுவும் சுற்றிக்கொண்டு எதற்காக கண்டெய்னர் லாரி சென்றது என்கிற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் உட்பட யாரும் பதிலளிக்க மறுக்கின்றனர்.