
உலககோப்பைக்கான நான்காவது வளைப்பந்துக்கான போட்டி ரஷ்யாவில் உள்ள பெலராஷ் நகரில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த போட்டியில் 9 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்துக்கொண்டனர். இந்தியா சார்பில் 6 ஆண் விளையாட்டு வீரர்களும், 6 பெண் விளையாட்டு வீரர்கள் என 12 வீரர்களும், 1 பயிற்சியாளரும் ரஷ்யா சென்றுள்ளனர்.
அங்கு 6 நாள் நடைபெற்ற போட்டியில் ஜெர்மனி அணி முதலிடத்தையும், தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்தையும், இந்தியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. வெற்றி பெற்ற அணிகளுக்கு முறையாக தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கம் தந்து கவுரவிக்கப்பட்டுள்ளது.
உலககோப்பை போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீரர்கள் ஆகஸ்ட் 12ந்தேதி இந்தியா திரும்பினர். உலககோப்பைக்காக விளையாடிய இந்தியாவை சேர்ந்த 12 வீரர்களில் இரண்டு ஆண் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டை சேர்ந்தவர்கள்.
அறிவழகன், திருஞானம் என்கிற இரண்டு விளையாட்டு வீரர்களும், முரளி என்கிற பயிற்சியாளரும் வளையாம்பட்டை சேர்ந்தவர்கள். தங்கள் ஊரை சேர்ந்தவர்கள் உலககோப்பை போட்டியில் வெற்றி பெற்றுவிட்டு திரும்பி வரும் தகவல் அறிந்து அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் வாணியம்பாடி இரயில் நிலையத்துக்கே வந்து ரோஜப்பூ மாலைப்போட்டு வரவேற்பு அளித்தனர்.
சர்வதேச அளவிலான போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்று இந்தியா வந்தவர்களை இந்தியரசும், தமிழகரசும் முறையாக கொண்டாடியிருக்க வேண்டும். இதுவரை அப்படியொரு எந்த நிகழ்வும் நடைபெறவில்லை.
மட்டைப்பந்து விளையாட்டு என்கிற கிரிக்கெட் போட்டிக்கும், டென்னிஸ் என்கிற பூப்பந்தாட்ட போட்டிக்கும், செஸ் என்கிற சதுரங்க விளையாட்டுக்கு முக்கியத்தும் தரும் இந்திய நாடு இதுப்போன்ற விளையாட்டுகளுக்கும் முக்கியத்தும் தந்தால் தான் அந்த விளையாட்டுகளும் வளர்ச்சி பெறும். இதனை எப்போது இந்திய மற்றும் தமிழக விளையாட்டு அமைச்சகங்களும், அமைப்புகளும் உணர்ந்துக்கொள்ளும் என தெரியவில்லை.