திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதிகளில் ரூ.10.78 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவுக்கு நகர மன்ற துணைத் தலைவர் வெள்ளைச்சாமி மற்றும் எம்பி வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும் போது, தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் கடைக் கோடி கிராமங்களில் வசிக்கும் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்காக ஒட்டன்சத்திரத்தில் 480 வீடும், கீரனூரில் 430 வீடும் கட்டுவதற்காக அனுமதி வழங்கியுள்ளார்கள்.
ஒட்டன்சத்திரம் பகுதியில் 3 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் ஒட்டன்சத்திரத்தில் கல்லுாரி கட்டடம் கட்டுவதற்கு ரூ.25.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருப்பாட்சியில் தொழிற்பயிற்சி நிலையம் ரூ.7.00 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. படித்து முடித்த பிறகு போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் காளாஞ்சிபட்டியில் ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் திறந்து வைக்க உள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு பொருளாதாரத்தில் வாழ்வாதாரத்தினை இழந்த மக்களுக்கு முதல் கையெழுத்திட்டு வாழ்வாதாரத்தினை இழந்த மக்களுக்கு உதவிடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை வழங்கினார்.
பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 440 கோடி பெண்கள் கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1.15 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒட்டன்சத்திரம் பகுதி மக்களுக்கு குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கு ரூ.1000 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு நபருக்கு தினமும் 135 லிட்டர் குடிநீர் வழங்கத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒட்டன்சத்திரத்தில் அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக ரூ.75.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. தலைக்கையன்கோட்டையில் இருந்து பழனி வரை நான்கு வழிச் சாலையில் மின்விளக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்கள் உயர் கல்வி படிப்பதற்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் ஆண்கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு சென்றால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்புதல்வன் திட்டத்திற்கு ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. ஏழை குடும்பங்களைச் சார்ந்த 5 இலட்சம் குடும்பங்களை கண்டறிந்து அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தால் தகுதியுள்ளவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களுக்கு தரமான அரிசி வழங்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட நாகணம்பட்டி பெரியாஞ்செட்டிபட்டியில் 5 பணிகள் ரூ.1.44 கோடி மதிப்பீட்டிலும், வார்டு 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் 6 பணிகள் ரூ.1.18 கோடி மதிப்பீட்டிலும்,10வது வார்டு பகுதியில் 4 பணிகள் ரூ.6.52 கோடி மதிப்பீட்டிலும், வார்டு 15, 16, 17 மற்றும் 18 ஆகிய பகுதிகளில் 8 பணிகள் ரூ.1.13 கோடி மதிப்பீட்டிலும், 14-வது வார்டு பகுதியில் 3 பணிகள் ரூ.42.20 இலட்சம் மதிப்பீட்டிலும், வார்டு 7, 9 மற்றும் 13 ஆகிய பகுதிகளில் 13 பணிகள் .2.35 கோடி மதிப்பீட்டிலும், வார்டு 1. 4, 5, 6 மற்றும் 8 ஆகிய பகுதிகளில் 16 பணிகள் ரூ.2.62 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 55 பணிகள் ரூ.10.78 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள இன்று(23.02.2024) அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் சொன்ன வாக்குறுதிகள் மட்டுமல்லாமல் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி ஒரு பொற்கால ஆட்சியை நடத்தி வருகிறார். அவர்களுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று கூறினார்