
தீக்குளிப்பு போன்ற உயிர்த் தியாகங்களில் தமிழக மக்கள் எவரும் ஈடுபட வேண்டாம் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மருமகன் சரவண சுரேஷ் என்பவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி விருதுநகரின் இன்று தீக்குளித்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் விரைவில் குணமடைய எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரிப் பிரச்சினை தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினை, உரிமைப் பிரச்சினை என்பதைக் கடந்து உணர்வுப்பூர்வமான பிரச்சினை என்பதில் எந்த ஐயமும் இல்லை. காவிரிப் பிரச்சினைக்கான தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் உணர்வுப்பூர்வமாக போராடி வருகின்றனர். உணர்வுப்பூர்வமாக போராடுவது பாராட்டத்தக்கது தான்; ஆனால், உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது யாருக்கும் எந்த நன்மையும் பயக்காது என்பதை அனைவரும் உணர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
காவிரி மற்றும் நியூட்ரினோ விவகாரத்தில் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகத்தைக் கண்டித்து இதுவரை மூவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்களின் போது திண்டிவனத்தில் மின்சாரம் தாக்கி ரஞ்சித் என்ற என் தம்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இத்துயரங்கள் போதாது என்று இப்போது வைகோவின் மருமகன் சரவண சுரேஷ் தீக்குளித்திருப்பது என் மனதை நொறுக்கியுள்ளது. இதுபோன்ற செயல்களில் தமிழ்ச் சொந்தங்கள் ஈடுபடுவதை எந்தக் காலத்திலும், எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
காவிரிப் பிரச்சினையில் நீதியை வென்றெடுக்க நாம் நீண்ட போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. அதற்கு அனைத்து தமிழர்களின் ஆதரவும் தேவை. அவ்வாறு இருக்கும் போது துணிச்சலுடன் போராடி வெற்றியை ஈட்டுவது தான் தமிழர்களின் வீரம். மாறாக உணர்ச்சிகளின் உச்சத்தில் தீக்குளிப்பது காவிரி உரிமையை வென்றெடுப்பதற்கான நமது போராட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி விடும். எனவே, காவிரிப் பிரச்சினைக்காக தமிழக மக்கள் எவரும் தீக்குளிப்பு போன்ற உதிர்த்தியாகங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சரவண சுரேஷ் விரைவில் நலம்பெற எனது விருப்பத்தை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.