செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம் மற்றும் தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மரபுவழி விதைகள், உணவுப் பொருட்களை மீட்டெடுக்கும் விதமாக விதைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில் மரபு வழியாக மூதாதையர்கள் வேளாண்மை செய்து வந்த பாரம்பரிய விதைகள் மற்றும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட விளை பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்படும்.
அந்தவகையில் 3-ஆம் ஆண்டு விதைத் திருவிழா விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாகத் தேவார பாடசாலை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் தேவாரப் பாடல்களைப் பாடி, அவற்றிற்கு பொருளும் கூறி இறைவணக்கம் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பெண்ணாடம் திருவள்ளுவர் கலைக்குழுவினர் பறையிசையாட்டம் நடைபெற்றது.
விதைத்திருவிழாவிற்கு கரும்பு கண்ணதாசன் தலைமை தாங்கினார். கோட்டேரி சிவக்குமார் வரவேற்புரையாற்றினார். திரைப்பட பாடலாசிரியர் பாவலர் அறிவுமதி தொடக்க உரையாற்றினார்.விருத்தாசலம் வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் பாஸ்கர் விளக்கவுரையாற்றினார். எழுத்தாளர் கண்மணி குணசேகரன், கவிஞர் இரத்தின.புகழேந்தி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இயற்கை வேளாண் கருத்தரங்கில் காரைக்கால் பாஸ்கர் இயற்கை வழி வேளாண்மை மற்றும் மரபு ரக நெற்களின் மகத்துவங்களைப் பற்றியும், பாரி மணிமொழி மதிப்புக் கூட்டுதலின் அத்தியாவசியமும் வழிமுறைகளும் பற்றியும், வேளாண் துறை இயக்குநர் (ஓய்வு) பெ.ஹரிதாஸ் பலாவின் சிறப்பு பற்றியும், சீர்காழி வீராசாமி ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றியும், குமிழியம் வீரமணி இயற்கை வழியில் முந்திரி சாகுபடி பற்றியும், தேனீ நண்பன் சுதந்திரசெல்வன் தேனீ வளர்ப்பு மற்றும் முக்கியத்துவம் பற்றியும், வேளாண் கல்லூரி மாணவி மு.தமிழ்மணி மரபு வழி வேளாண்மையின் இன்றையத் தேவைப் பற்றியும் உரையாற்றினர். முன்னோடி உழவர்களான பொறியாளர் பன்னீர்செல்வம், கோபுராபும் ராமராஜன், கவிஞர் சிலம்புச்செல்வி எருமனூர் கோவிந்தராஜ் மற்றும் வேளாண் கல்லூரி மாணவி ஆர்த்தி ஆகியோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் காலை உணவாக மாப்பிள்ளைச் சம்பா கஞ்சியும், மதிய உணவாக தூயமல்லி சாம்பார் சாதம், கருப்பு கவுணி இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.
விழாவையொட்டி நடைபெற்ற கண்காட்சியில் மாப்பிள்ளைச் சம்பா, கிச்சலி சம்பா, கருப்புகவுனி, கருங்குருணை போன்ற மரபுவழி நெல் விதைகள், வரகு கேழ்வரகு கொள்ளு பச்சைப்பயறு போன்ற நவதானிய விதைகள், காய்கறி விதைகள், கீரை விதைகள், மூலிகை கன்றுகள் மற்றும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய நெல், அரிசி, தானியங்கள் உள்ளிட்ட உணவு விளைப்பொருட்கள், நெகிழிப் பைகளுக்கு மாற்றான துணிப்பைகள் துணிப்பைகள், பனிக்கூழ், மண்பாண்ட பொருட்கள், முளைப்பாரிகள், காய்கறிகள், மூலிகை மருந்துகள், மாட்டுத் தீவன விதை புல் ரகங்கள், மரத்தினாலான பொருட்கள் மற்றும் இயற்கை இடுபொருட்கள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காட்சிக்கு வந்திருந்த விவசாயிகள் பலரும் ரசாயன உரங்கள் பயன்படுத்துவதற்கு மாற்றாக இயற்கை முறையிலான விவசாயத்தில் ஈடுபடுவோம் எனக் கூறி விதைகளை வாங்கி சென்றனர். பொதுமக்கள் இவற்றை ஆர்வமுடன் பார்வையிட்டதுடன் தங்களுக்குத் தேவையான அளவில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களை வாங்கி சென்றனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து நம்மிடம் பேசிய ஏற்பாட்டாளர்கள், " நமது மூதாதையர்கள் 'உணவே மருந்து' என இயற்கை முறையில் விளைவித்து, அவற்றை உண்டு வந்ததால் நோயற்ற வாழ்வுடன் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தனர். ஆனால் தற்காலத்தில் இரசாயன உரங்கள் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களைத் தொடர்ந்து உண்பதால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி ஆயுளும் குறைகிறது. மேலும் தொடர்ச்சியாக ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் விவசாய நிலங்கள் மலடாகி விவசாயத்திற்குப் பயன்பட முடியாத சூழல் எதிர்காலத்தில் ஏற்படும். இவற்றைத் தவிர்க்கவும், மரபு ரீதியாக நமது மூதாதையர்கள் பயன்படுத்திய விதைகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை, ஆரோக்கியமான எதிர்காலத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொடுக்க முடியும் என்பதை உணர்த்தவும் இந்த விதை திருவிழாவை நடத்துகிறோம்" என்கின்றனர்.