
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவந்தது. இதில் உய்யகொண்டான் வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, கோரை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நகரின் பல முக்கியமான இடங்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி, வீடுகளுக்குள் புகுந்துள்ளது. குறிப்பாக, உறையூர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. உறையூர், குமரன் நகர், வயலூர் ரோடு என அத்தனை பகுதிகளிலும் மழை நீரை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுவருகிறது.
அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. எனவே கடந்த 5 நாட்களாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை உறையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன் தன்னுடைய சொந்த செலவில் தினந்தோறும் பொதுமக்களுக்கு வழங்கிவந்துள்ளார். காவலரின் இச்செயலுக்கு பொதுமக்கள் மற்றும் பலர் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.