ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக புங்கம்பள்ளி, அய்யம்பாளையம், பனையம்பள்ளி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சுற்றுவதாக பொதுமக்கள் தொடரும் புகார் தெரிவித்தனர்.
கடந்த வாரம் புங்கம்பள்ளி அருகேயுள்ள தச்சு பெருமாள் பாளையத்தில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அய்யப்ப பக்தர்கள் போல் மாலை அணிந்து வந்த இருவர் மயக்க பொடி தூவி தங்கக் கம்மலை பறித்துச் சென்றனர். மேலும் பனையம்பள்ளி, அண்ணா நகர் உள்ளிட்ட கிராமங்களில் 10-க்கும் மேற்பட்ட தோட்ட மின் மோட்டார்களில் வயர் திருட்டு நடந்துள்ளது. அய்யம்பாளையத்தில் உள்ள தனியார் சோலார் நிறுவனத்தில் மின் வயர்களை திருடி சென்றுள்ளனர்.
புளியம்பட்டி பகுதியில் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதாலும் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இரவு நேரத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.