மேட்டுப்பாளையம் அருகே மோத்தேபாளையம் கிராமப்பகுதியில் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை வனத் துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. இதனால் கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில் மோத்தேபாளையம் என்னும் கிராமப்பகுதி உள்ளது. இங்கு விவசாயத் தொழில் முக்கியப்பங்கு வகித்து வருகின்றது. கிராமப் பகுதியையொட்டி கோவை வனக்கோட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட சென்னாமலைக்கரடு என்னும் வனப்பகுதி உள்ளது.
கடந்த சில மாதங்களாக இரவு நேரத்தில் சென்னாமலைக்கரடு வனப்பகுதியில் இருந்து வனப்பகுதியை யொட்டியுள்ள மோத்தேபாளையம் கிராமத்திற்குள் புகும் சிறுத்தை தோட்டங்களில் இருந்த கன்றுக்குட்டிகள் மற்றும் நாய்களை கடித்துக்குதறி கொன்று வந்தது. சிறுத்தையின் அட்டகாசம் மற்றும் நடமாட்டம் கிராம மக்களிடையே ஒருவிதஅச்சத்தை ஏற்படுத்தியது. பகல்,இரவு நேரங்களில் நடமாட பயந்து வீட்டிற்குள்ளேயே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இதனால் விவசாயத்தொழிலும் பாதிக்கப்பட்டது. அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கிராமமக்கள் சிறுமுகை வனத்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
தானியங்கி கேமரா வைத்து கண்காணிப்பு :
இதனையடுத்து சிறுமுகை வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தைக்கண்டறிய தானியங்கி கேமராவை தீவிர கண்காணிப்பு செலுத்தி வந்தனர்.கேமராவில் பதிவான சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்ட தோட்டத்தை யொட்டியுள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் நேற்று மாலை கூண்டை வைத்தனர். இரண்டாக பிரிக்கப்பட்ட கூண்டின் பின்புறம் ஒரு ஆட்டை கட்டி வைத்து கூண்டை செடி,கொடிகள்மற்றும் இலை,தழைகளால் மூடி வைத்தனர்.வனத்துறையினர் தீவிர கண்காணிப்பும் செலுத்தி வந்தனர்.
இந்தநிலையில் இன்று காலை கூண்டருகே சென்று பார்த்த போது கூண்டிற்குள் இருந்து உறுமல் சத்தம் கேட்டது. கூண்டிற்குள் பார்த்த போது 2 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தைக்குட்டி அங்கும்,இங்கும் ஆக்ரோஷத்துடன் அலைந்து திரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். சிறுத்தை சிக்கிய கூண்டை லாரியில் பத்திரமாக ஏற்றினர்.
அதன்பின்னர்பவானிசாகர் அருகே உள்ள தெங்குமரஹாடா வனப்பகுதியில் கூண்டில் சிக்கிய சிறுத்தையை கூண்டைத்திறந்து விட்டனர்.கூண்டைத்திறந்ததும் சிறுத்தை வனப்பகுதிக்குள் துள்ளிக்குதித்து பாய்ந்தோடி மறைந்தது. கூண்டில் சிறுத்தை சிக்கியதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.முன்பொரு முறை இதே மோத்தேபாளையம் கிராமத்தில் அட்டகாசம் செய்த சிறுத்தையை சிறுமுகை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தது குறிப்பிடத்தக்கது.