ஆண்டுகளுக்கு முன்பாக சுருளிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் உள்ள சின்னச்சாமி என்பவரின் வீடு ஒன்றின் மேல் கடன் கொடுத்துள்ளார். அந்த வீட்டினை கடன் தொகைக்காக நீதிமன்றத்திற்கு சென்றும் வழக்குத் தொடுத்துள்ளார். அந்த வழக்கின் அடிப்படையில், சிவானந்தனுக்கு வீடு சொந்தம் என்று தீர்ப்பு வந்துள்ளது. இதையடுத்து, சிவானந்தனுக்கு நீதிமன்ற அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்டோர் அந்த வீட்டினை மீட்டெடுத்துக் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, அந்த வீட்டின் மீதான வரி ரசீதினை சிவானந்தன் பெயருக்கு மாற்றம் செய்து தரக் கூறி கடந்த எட்டு மாதத்திற்கு முன்பாக சுருளிப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால், ஊராட்சி சார்பில் பெயர் மாற்றம் செய்து தராமல் தொடர்ந்து இழுப்பறி செய்து வந்துள்ளனர். இதனால், தொடர்ந்து சிவானந்தன் கலெக்டர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று இது குறித்து மனு கொடுத்துள்ளார். இருந்த போதும், தொடர்ந்து எட்டு மாத காலமாக அவருக்கு பெயர் மாற்றம் செய்து தராமல் அலைக்கழிப்பு செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், வீட்டு வரி ரசீது பெயர் மாற்றம் செய்து தருவதற்கு, சுருளிப்பட்டி ஊராட்சி செயலர் சந்திரசேகர் என்பவர் வெளிப்படையாக 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், அவரிடம் 8000 ரூபாய் தருவதாக சிவானந்தன் கூறிவிட்டு.. லஞ்சம் கொடுக்க மனம் இல்லாமல் சிவானந்தன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சிவானந்தன் சுருளிப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் இருந்த ஊராட்சி செயலர் சந்திரசேகரிடம் கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்து லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் தலைமையிலான போலீசார் ஊராட்சி செயலர் சந்திரசேகரனை கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து, ஊராட்சி செயலாளர் சந்திரசேகரிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி கொண்டு ஊராட்சி செயலர் சந்திரசேகரனை கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
தேனி மாவட்டம், கம்பம் அருகே வீட்டு வரி ரசீது பெயர் மாற்றம் செய்து தருவதற்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.