சேலத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு முதியவர் பலியானார்.
சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள கள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (65). ஆடிட்டர் ஒருவரிடம் உதவியாளராக வேலை செய்து வந்தார். மனைவி, குழந்தைகள் இல்லாததால் ஜெயராமன் மட்டும் தனியாக ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார்.
கடந்த 9ம் தேதி ஜெயராமனுக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கடுமையான வைரஸ் காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், திங்கள் கிழமை (நவம்பர் 12, 2018) காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
உறவினர்கள் யாரும் இல்லாததால், ஜெயராமனின் சடலம் பிரேத பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு டெங்கு, பன்றி காய்ச்சல் அறிகுறிகள் இல்லை என்றும் கடுமையான வைரஸ் காய்ச்சல்தான் என்றும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெயராமன் வசித்து வந்த பகுதியில் தீவிர துப்புரவு பணிகளுக்கு முடுக்கிவிடப்பட்டு உள்ளது. டெங்கு தடுப்புக்குழுவினர் இப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.