அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும். மாணவர்களை அரசுப்பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்று பெற்றோர்களும் இளைஞர்களும் தீவிரம் காட்டி வருகின்றனர். அதனால் பள்ளிகளுக்கு செல்லும் இளைஞர்கள் மாணவர்களின் படிப்புக்கு என்ன தேவை என்பதை அறிந்து அந்த உதவிகளை செய்வதுடன் வளர்ச்சிக்கான ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.
கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் பனங்குளம் வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் புதிய தலைமை ஆசிரியர் கருப்பையன் பள்ளியின் வளர்ச்சிக்காக "ஆளுக்கொரு ஆலோசனை" என்ற கூட்டத்தை கூட்டினார். கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்களும், இளைஞர்களும் ஆளுக்கொரு ஆலோசனை சொன்னதுடன் அந்த ஆலோசனைகளை செயல்படுத்த களமிறங்கியுள்ளனர். முதலில் விளையாட்டு திடல் மராமத்து பணியை கிராம மக்களே முன்னின்று செய்ததுடன் அத்யாவசிய தளவாட பொருட்கள் வாங்க தாராளமாக நிதியும் வழங்கினார்கள். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தனியார் பள்ளி மாணவர்களின் பெற்றோரும் தங்கள் குழந்தைகளையும் அரசுப்பள்ளியில் சேர்ப்போம் என்று கூறினார்கள்.
அதே போல இப்போது பல அரசுப் பள்ளி ஆசிரியர்களும் ஆர்வத்துடன் கிராம மக்களை ஒருங்கிணைத்து பள்ளிகளை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல போட்டி போடுகின்றனர்.

இந்த நிலையில் தான்.. அன்னவாசல் ஒன்றியம் உருவம்பட்டி கிராமத்தில் அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கவும், சுற்றுச் சுவர் வசதி, குடிநீர் வசதி பெற உள்ளாட்சி அமைப்புகளை நாடுவது எனவும் வெள்ளிக் கிழமையன்று நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் உருவம்பட்டி ஊர்பொதுமக்கள் உறுதிமொழி எடுத்து அசத்தியுள்ளனர்.
பள்ளியின் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காக கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 ன் படி பள்ளி மேலாண்மைக் குழு ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. அத்தகைய மேலாண்மை குழுவின் கூட்டம் தான் இன்று உருவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட ஊர்ப் பொதுமக்கள் அரசுப் பள்ளியில் ஏராளமான சலுகைகளை அரசாங்கம் நமக்காக அளித்து வருகிறது. அதனை கிராம மக்கள் நாம் பயன்படுத்தும் விதமாக நமது ஊர் பிள்ளைகளை நம் ஊர் அரசுப் பள்ளியிலே சேர்க்க வேண்டும். பள்ளியின் வேலை நாட்களில் ஆசிரியர்கள் மாணவர்கள் இருப்பதால் வேறு யாரும் பள்ளிக்குள் வருவதில்லை. ஆனால் பள்ளி விடுமுறை நாட்களில் சில நபர்கள் உள்ளே வந்து சேதப்படுத்தும் செயல் நடந்து வருகிறது. அவர்களை தடுக்கும் முயற்சியை கிராம மக்களாகிய நாம் எடுக்க வேண்டும். அவ்வாறு தடுத்தால் தான் பள்ளியின் பொருள்கள் பாதுகாக்கப்படும். இது போன்ற நபர்கள் உள்ளே வருவதை தடுக்க சுற்றுச் சுவர் கட்டவும், மாணவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மனு அளிக்க வேண்டும். பள்ளியின் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டு வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராசு பேசியதாவது: பள்ளி மேலாண்மைக் குழுவானது பள்ளியின் வளர்ச்சியில் கவனம் செலுத்துதல், பள்ளி அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், மாணவர்களின் கற்றல் திறனை கூர்ந்து கவனித்தல், அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும் 6 முதல் 14 வயது வரை பள்ளியில் சேர்ப்பது இக்குழுவின் நோக்கமாகும். பள்ளி மேலாண்மைக் குழுவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இடம் பெறுவர். இக்குழுவின் பிரதான நோக்கமே சமுதாயத்தோடு இணக்கமாக இருந்து பள்ளிக்கு தேவையான வசதிகள் மற்றும் நிதி ஆதாரங்களை சமூக பங்களிப்பின் வாயிலாக ஏற்படுத்துதலே என்றார். கூட்டத்திற்கு வந்திருந்த கிராமத்தினர் பெரிநாயகி, அடைக்கி, லெட்சுமி ஆகியோர் கூறியதாவது: பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்திற்கு அனைத்து பெற்றோர்களோடு ஒன்றாக வந்து மாணவர்கள் நலன் பள்ளி நலன் பற்றி பேசியது மகிழ்வாக இருக்கு. உருவம்பட்டி பள்ளியை பார்த்து மற்ற ஊர்க்காரர்கள் பாராட்ட வேண்டும். அருகாமை கிராமத்தில் உள்ளவர்களும் நம்மூர் பள்ளியில் வந்து பிள்ளைகளை சேர்க்க ஆசைபடனும். பள்ளி வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு என்றும் உண்டு என ஆசிரியர்களிடம் கூறினர்.
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்திற்கு பெற்றோர்கள் அனைவரும் தங்களது கைக் குழந்தைகளோடு கூட்டத்திற்கு வந்து ஆர்வமுடன் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியர் ஜெ.சாந்தி செய்திருந்தார். கூட்டத்தில் ஆசிரியர் பயிற்றுநர் த. கண்ணன் மற்றும் இளைஞர் மன்ற மகளிர் மன்ற உறுப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் முனியசாமி நன்றி கூறினார்.