மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு சான்றோன் விருது வழங்கும் விழா கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்தது. அதைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் மேற்கு மண்டல மற்றும் தொகுதி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
இதில் தலைமை தாங்கி பேசிய கமல்ஹாசன்,
தமிழக அரசியலை மாற்ற போகும் பெருங்கூட்டம் இந்த தேர்தலில் வாக்களிக்க இருக்கிறது. அந்த கூட்டத்தை நீங்கள் வழிநடத்த வேண்டும். நம்மை பார்த்து நன்மை செய்ய அரசியல் கட்சிகள் மாற வேண்டும். அந்த ஆசை எனக்கு இருக்கிறது. அது உங்களுக்குள் வர வேண்டும்.
5 வருடங்கள் முழுவதும் விழித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளதால் 30 வருடங்கள் நாம் பின்தங்கிவிட்டோம். நமது மாநிலத்தின் நிலை பின்தங்கி உள்ளது. அதை மாற்ற வேண்டும் என்றால் ஒரே நாளில் செய்ய முடியாது. நமக்கு இன்னும் இருக்கக்கூடிய காலம் 2 மாதம்தான். நினைத்தால் அந்த இடத்தை நாம் அடைய முடியும்.
நமக்கு பதவி, பணத்தை பார்த்தால் பயம் வந்துவிடுகிறது. ஒருவர் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு ஓடினால் திருடன் என்று கத்துகிறார்கள். அதுவே வங்கி மேலாளர் செய்தால் கையாடல் என்கிறார்கள். அமைச்சர் செய்தால் ஊழல் என்கிறார்கள். திருடன், திருடன்தானே. நேர்மையாளன் இருக்கிறார்கள். எனவே நமது கூட்டத்தில் திருடன்கள் சேர்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இங்கே கூட்டணி குறித்து பல கருத்துக்களை கூறி வருகிறார்கள். கோழிக்கூட்டில் விழுந்தோமே தவிர நாம் கோழிக்குஞ்சுகள் இல்லை. ராஜாளி கழுகுகள். மறந்து விடக்கூடாது. நாம் இவர்களுடன் இருக்க கூடியவர்கள் அல்ல. ஊழலை ஒழிப்போம் என்று கூறி கழுவிய கைகளை மீண்டும் அசிங்கப்படுத்த முடியாது. உங்களை வழிநடத்தி போகிறவன், குறுக்கு பாதையில் கொண்டு செல்ல 37 வருடம் கஷ்டப்படுத்தி இருப்பேனா? குறுக்கு பாதையில் போவதாக இருந்தால் என்னை மேம்படுத்தி கொண்டால் போதுமானது என்று நினைத்து இருப்பேன். இவ்வாறு கூறினார்.