திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கன்னிவாடி மற்றும் கே.புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் கரோனா இரண்டாம் கட்ட நிவாரண தொகை ரூ 2000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்துகொண்டு நிவாரண தொகையைப் பொதுமக்களுக்கு வழங்கினார்.
அதன்பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்கப்படும். உறுப்பினர் அல்லாதவர்களையும் உறுப்பினர்களாகச் சேர்த்து பயிர்க்கடன் வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொதுமக்களுக்கு வழங்கக் கூடிய அரிசி, சீனி, கோதுமை உட்பட அனைத்து பொருட்களும் எடை குறையாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் எல்லாம் என்ற நிலையை உருவாக்குவதுதான் முதல்வரின் கொள்கை. அவரது கொள்கை நிறைவேற்றப்பட்டு வருகிறது. கரோனா நிவாரண நிதி முதல்கட்ட தவணை 99.5% வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டுப்போன பொதுமக்களுக்கும் அந்தத் தொகை வழங்கப்படும். அதேபோல் இரண்டாம் கட்ட தவணை வழங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.