தமிழகத்தில் தடயவியல் பரிசோதனை துறையில் குறைந்த அளவு பணியாளர்கள் இருப்பது குறித்து தமிழக உள்துறை செயலர்,தடயவியல் பரிசோதனை இயக்குனர் ஆகியோர் விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா அண்ணா நகர் பகுதியை சேர்ந்த குணசேகரன் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், " எனது மகள் சரண்யாவிற்கும் ராஜா என்ற ரமேஷ் என்பவருக்கும் 31.08.2017 ல் திருமணம் நடந்தது. மனநிலை பாதிக்கப்பட்ட முதல் குழந்தை என மொத்தம் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அதிக வரதட்சணை கேட்பது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி ஆலங்குடி காவல் நிலையத்தில் குழந்தைகளை கணவர் ராஜாவிடம் காண்பிக்குமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி 16.07 2017 அன்று குழந்தைகளை காண்பிக்க சென்ற சரண்யா வீடு திரும்பவில்லை. தனது மகளை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக எனது உறவினர் ஒருவர் எனக்கு தகவல் கூறினார்.
நான் எனது மகள் சரண்யாவை கண்டுபிக்க கோரி ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சரண்யாவை காணவில்லை என வழக்குபதிவு செய்தனர்.ஆனால் எனது மகள் சரண்யாவை ராஜா கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது.எனவே காணாமல் போன எனது மகளை கண்டுபிடித்து தரகோரி ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு ஏற்கனவே சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆலங்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டு ஒரு அடையாளம் தெரியாத பிணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பபட்டு, டி.என்.ஏ. சோதனை முடிவுக்காக காத்திருப்பதாகவும் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் கூறபட்டது. இதனையடுத்து தடயவியல் பரிசோதனை துறையில் அதிகளவில் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் தடயவியல் பரிசோதனை துறை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே தமிழக உள்துறை செயலர், தடயவியல் பரிசோதனை இயக்குனர் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர் மனுதாரர்களாக சேர்க்கிறது.
தடயவியல் பரிசோதனை துறையில் குறைந்த அளவில் பணியாளர்கள் இருப்பது தமிழக உள்துறை செயலர், தடயவியல் பரிசோதனை இயக்குனர் ஆகியோர் விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கினை இரண்டு வார காலங்களுக்கு ஒத்திவைத்தனர்.